முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இன

374

திருவாய்மொழி - ஏழாம் பத்து

இன்றிக்கே இருக்கிற என்னைக்கொண்டு. தன்னை உறப் பல இன்கவி சொன்ன - 1‘சொல்ல மாட்டாது அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வேத வாக்கியங்கள் மீண்டனவோ’ என்கிறபடியே, 2‘வேதங்கள் மீண்ட விஷயத்தை மறுபாடு உருவச் சொன்ன’ என்று சீயர் அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘சர்வேஸ்வரனுக்குச் சால உற்றது என்கிறார்’ என்று பிள்ளான் அருளிச்செய்வர். பல இன்கவி சொன்ன - 3‘வால்மீகி முனிவர் இருபத்து நாலாயிரம் சுலோகங்களையும், ஐந்நூறு சர்க்கங்களையும், ஆறு காண்டங்களையும், உத்தர காண்டத்தையும் சொன்னார்,’ என்னுமாறு போலே, ‘சம்சாரத்திலே இப்படி விலக்ஷணமாய் இருக்கும் பாசுரங்கள் ஆயிரம் பாடுவதே!’ என்கிறார். உதவிக்கு - இனிய கவிகளைச் சொன்ன இந்த உபகாரத்துக்குத் திருமாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?

(9)

                       760

        உதவிக்கைம் மாறுஎன் உயிர்என்ன உற்றுஎண்ணில்
        அதுவும்மற்று ஆங்கவன் தன்னதுஎன் னால்தன்னைப்
        பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
        எதுவும்ஒன் றும்இல்லை செய்வதுஇங் கும்அங்கே.

   
பொ - ரை : அவன் செய்த உபகாரத்துக்குப் பிரதி உபகாரமாக என்னுடைய உயிரை அவனுக்கு உரியது ஆக்கலாம் என்று பொருந்தி நினைத்தால் அந்த உயிரும் அவனுடையதே; ஆதலால், என்னைக் கொண்டு மிருதுவான இனிய கவிகளைத் தன்னைப் பாடிக்கொண்ட அப்பனுக்கு என்னால் செய்யத்தக்கது இவ்வுலகத்திலும் அந்த உலகத்திலும் யாது ஒன்றும் இல்லை.

_____________________________________________________________

1. ‘உற’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘சொல்லமாட்டாநு’ என்று
  தொடங்கி. இந்த வேத வாக்கியத்தை முன்னர்க் காண்க.

2. ‘உற’ என்பதற்கு, ‘மறுபாடுருவ’ என்பதும், ‘தகுதியாக’ என்பதும்
  இருபொருள்; இவ்விரண்டு பொருளையும் முறையே அருளிச்செய்கிறார்,
  ‘வேதங்கள்’ என்று தொடங்கியும், ‘அன்றிக்கே’ என்று தொடங்கியும்.

3. ‘பல இன்கவி’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘வால்மீகி முனிவர்’
  என்று தொடங்கியும், ‘அன்றிக்கே’ என்று தொடங்கியும்.

    ‘சதுர்விம்ஸத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநாம் உக்தவாந் ரிஷி:
    ததா ஸர்க்க ஸதாந்பஞ்ச ஷட்காண்டாநி ததோத்தரம்’

என்பது, ஸ்ரீராமா. பாலா. 4 : 2.