முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

763

392

திருவாய்மொழி - ஏழாம் பத்து

               763

        ஆகுங்கொல் ஐயம்ஒன்று இன்றி
             அகலிடம் முற்றவும் ஈரடியே
        ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குற
             ளப்பன் அமர்ந்துஉறையும்
        மாகந் திகழ்கொடி மாடங்கள் நீடு
             மதிள்திரு வாறன்விளை
        மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து
             கைதொழக் கூடுங்கொலோ?

   
பொ - ரை : ‘ஆகுமோ!’ என்ற சந்தேகம் ஒரு சிறிதும் இல்லாமல் அகன்று உலகமனைத்தும் இரண்டு திருவடிகளுக்குள்ளே ஆகும்படி வளர்ந்த அழகிய வாமனனாகிய உபகாரன் பொருந்தி எழுந்தருளியிருக்கின்ற, பெரிய ஆகாசத்திலே விளங்குகின்ற கொடிகளையும் மாடங்களையும் நீண்ட மதிள்களையுமுடைய திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தை, சிறந்த வாசனை பொருந்திய தண்ணீரைக்கொண்டு தூவி வலம் வந்து கையால் தொழுவதற்குக் கூடுமோ?

    வி - கு : ‘அப்பன் உறையும் திருவாறம்விளை’ என்க. ‘திருக்குறள்’ என்னும் இவ்விடத்தில், திருவள்ளவனார் தம்முடைய நூலுக்குத் ‘திருக்குறள்’ என்று பெயர் வைத்திருத்தலை நினைவு கூர்தல் தகும்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘திருவாறன் விளையிலே மிக்க வாசனையையுடைத்தான நீரைக்கொண்டு திருநீர் விட்டு வலம் வந்து கையாலே தொழவும் கூடவற்றே!’ என்கிறார்.

    ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி - 2இது அநுபாஷணம் ஆகாநிற்கச் செய்தே, ஆதரத்தின் மிகுதிக்குச் சூசகமாயிருக்கிறது. ஒரு சந்தேகம் இன்றிக்கே நமக்கு இது கூடவற்றோ? 3‘அன்றிக்கே, ஆகுங்கொல் என்ற ஐயமுங்கூட இன்றிக்கே ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்தான்’ என்று மேலே கூட்டவுமாம். 4எல்லாம் செய்தாலும் ‘நமக்கு இது கூடுமோ, கூடாதோ!’ என்று இருந்தானாயிற்று

_____________________________________________________________

1. பின் இரண்டு அடிகளைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘மீண்டும் ‘ஆகுங்கொல்’ என்கிறது என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இது அநுபாஷணம்’ என்று தொடங்கி. அநுபாஷணம்
  - வழி மொழிதல். பதப்பொருள் அருளிச்செய்கிறார், ‘ஒரு சந்தேகம்’
  என்று தொடங்கி. ‘ஐயம் ஒன்று இன்றி ஆகுங்கொல்!’ என்றபடி.

3. மேலதற்கே வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’
  என்று தொடங்கி.

4. ‘சர்வ சத்தியான சர்வேஸ்வரனுக்கு ஐயத்துக்குக் காரணம் யாது?’ என்ன,
  ‘எல்லாம் செய்தாலும்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.