முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

முதல் திருவாய்மொழி - முன்னுரை

7

எடுத்துச் சொன்னவை எல்லாம் பிறர் வாயாலே சொன்னாற்போலே இருக்கையாலே, ஆழ்வாரான தன்மையிலே நின்று இன்னாதாம்படியான நிலை விளைந்தது இவர்க்கு. 1இவர். எல்லா அளவிலும் ஸ்ரீஜனகராஜன் திருமகளாரோடு ஒப்பார் ஒருவராயிற்று. என்றது, அத்தலையில் குறை இடுவார் ஒருவர் அன்றிக்கே ‘இவற்றுக்கெல்லாம் அடி நம்முடைய பாபம்’ என்றிருப்பார் ஒருவர் என்றபடி.

    இங்ஙனே இருக்கக்கடவ இவர், அவன் தலையிலே குறையை ஏறிட்டுக் கூப்பிடுகிறார் அன்றோ அந்த நிலை விளைகையாலே? 2‘இவர் தாம் தம்மாலே வந்ததனை அவன் தலையிலே ஏறிடுவான் என்?’ என்னில், சம்பந்தத்தை உணர்ந்தால், இத்தலையாலே வந்ததனையும் அவன் பக்கலிலே ஏறிடலாய் இருக்கும் அன்றோ? குழந்தை கிணற்றிலே விழுந்தால், ‘தாயானவள் தள்ளினாள்’ என்னககடவாதாயிருக்கும். என்றது. ‘தாயானவள் கண்களிலே வெண்ணெய் இட்டுப் பார்த்திருந்தாளாகில் இக்குழந்தை விழுமோ? இவள் நோக்காமை அன்றோ கேடுற்றது?’ என்று கொண்டு அவள் தலையில் குறை சொல்லக் கடவதாய் இருக்கும் என்றபடி. 3உதங்கன் கிருஷ்ணன் பக்கலிலே வந்து, ‘உனக்கு இரு திறத்தாரோடும் சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, பாண்டவர்களை அழிக்காமல் துரியோதனாதியர்களை அழித்தாய்; இப்படிச் சார்வு செய்யப்போமோ?’ என்றாற்போலே வார்த்தைகள் சிலவற்றை அவன் சொல்ல, கிருஷ்ணனும் அவர்கள் குறைகளை எல்லாம் சொல்லி, ‘அவர்கட்குத் தருமத்தில் ருசி இல்லைகாண் என்ன, ‘நீ பின்னை அவர்களுக்குத் தருமத்தில் ருசி உண்டாக்கிக் கொடாது ஒழிவான் என்?’ என்றான் அன்றோ?

________________________________________________________________________

1. ‘இன்னாதாம்படியான நிலை விளைந்தது இவர்க்கு’ என்பதற்கு, ‘இவருடைய இயற்கைத்
  தன்மை யாது?’ என்ற சங்கையிலே, இவருடைய உண்மை நிலைமையையும், இப்படி
  இருக்கிற இவர் அவனை வெறுக்கிறது ஒரு நிலை விசேடம் என்னுமதனையும்
  தெளிவாக அருளிச்செய்கிறார், ‘இவர் எல்லா அளவிலும்’ என்று தொடங்கி.

2. அவனை வெறுப்பதற்குக் காரணம் ஒரு நிலை விசேடமே அன்றிக்கே,
  சம்பந்தமடியாகவும் வெறுக்கலாம் என்னுமதனைச் சங்காபரிஹார மூலமாக
  அருளிச்செய்கிறார், ‘இவர்தாம்’ என்று தொடங்கி.

3. தாம் அருளிச்செய்ததற்கு அநுஷ்டானமும் காட்டுகிறார், ‘உதங்கள்’ என்று தொடங்கி.
  உதங்கன் - ஒரு முனிவன்.