முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

72

திருவாய்மொழி - ஏழாம் பத்து

இருப்பனவும் சுவாதீனம் அற்றனவும் மிக வெளுத்தனவுமான அவயங்களையுடையவள்’ என்கிறபடியே, தோழிமார் போகட்ட இடத்தே கிடக்குமித்தனை. சுவாதீனம் இல்லாமையாலே தோழிமார் இட்டு வைத்த காலும் கையுமாய் இருக்கும். எழுந்து உலாய் மயங்கும்- 1அவியும் விளக்குக் கிளர்ந்து எரியுமாறு போலே அடி அற்ற எழுச்சியும் அடி அற்ற உலாவுகையுமாய் இராநின்றது; 2அது கிளர்ந்து எழுந்தவுடனே அவியுமாறு போலே மயங்காநின்றாள். கை கூப்பும்-3உணர்த்தியில் தொழுமவள் அல்லள்; மயங்கினால் தொழாதிருக்க வல்லள் அல்லள்; 4சாதனபுத்தியில் தொழுமது இல்லை; ஆற்றாமையாலே வருமது தவிரமாட்டாள். கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்-5சாதனபுத்தியால் தொழுதாளாகில் ‘கட்டமே காதல்’ என்னக் கூடாதன்றோ? பிரிவு நிலையில் நலிவுக்குக் காரணமாகையாலே அன்பு தண்ணிது என்கிறாள். கடல் வண்ணா கடியைகாண் என்னும்-6‘கடல் எல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி, ஒன்றை ஒன்று நலியாதபடி நோக்குமாறு போலே, எல்லாப்பொருள்களையும் காப்பாற்றுகின்ற நீ அருள் இல்லாதவன் ஆனாய்’ என்னும். அன்றிக்கே, ‘பிரிந்தார்க்குத் தரிக்க ஒண்ணாதபடியான வடிவு படைத்த நீ கொலைஞன் ஆகாநின்றாய்’ என்னும் என்னுதல்.

___________________________________________________________________

1. ‘இட்ட கால் இட்ட கையளானால் எழுந்து உலாவக் கூடுமோ?’ என்ன, ‘அவியும்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. ‘மயங்கும்’ என்பதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘அது கிளர்ந்து’ என்று
  தொடங்கி.

3. ‘மயங்கும் கை கூப்பும்’ என்று கூட்டி, மறைமுகத்தானும் விதி முகத்தானும் பாவம்
  அருளிச்செய்கிறார், ‘உணர்த்தியில்’ என்று தொடங்கி.

4. சுவாபதேசப் பொருள் அருளிச்செய்கிறார், ‘சாதனபுத்தியால்’ என்று தொடங்கி.

5. ‘சாதனபுத்தியால் தொழுகிறாள் என்றலோ?’ எனின், ‘சாதனபுத்தியால்’ என்று
  தொடங்கி  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

6. ‘வண்ணம்’ என்பதற்குப் பாதுகாக்குந் தன்மை என்றும், வடிவழகு என்றும் இரண்டு
  பொருள் கொண்டு, இரண்டு பொருளிலும் பாவம் அருளிச்செய்கிறார், ‘கடல்’ என்று
  தொடங்கியும், ‘அன்றிக்கே’ என்று தொடங்கியும், ‘கொலைஞன்’ என்றது, வடிவினை
  அனுபவிப்பியாதிருத்தலை நோக்கி.