முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

74

திருவாய்மொழி - ஏழாம் பத்து

சிலர் அமைந்தார்களே அன்றோ அபலைகள் குடி கெடுக்கைக்கு? அழகிதாகத் திருவருளையே மிகுதியாகவுடையவராய் இருந்தீர்’ என்னுதல். என்றது, 1‘பிரஹ்ம ஹத்தியைகளைச் செய்து பூணூலை வெளுக்கவிட்டுக் கையிலே பவித்திரத்தையுமிட்டு ஓத்துச் சொல்லித் திரிவாரைப்போலே இருந்ததே உம்முடைய படி’ என்றபடி. செழுநீர்த் திருவரங்கத்தாய் - சிரமத்தைப் போக்கும்படியான நீரையுடைய கோயில். 2தண்ணீர்ப் பந்தலிலே கொலைஞர் தங்கினதைப் போன்றதேயன்றோ நீர் இவ்வூரில் சாய்ந்ததும்? இவள் திறத்து என் சிந்தித்தாயே - 3முற்றறிவினனுக்கும், இவளுக்கு ஓடுகிற நீலைக்குப் பரிஹாரம் சிந்திக்க வேணும் என்றிருக்கிறாள்; 4திருத்தாயார் தெளிவு இருக்கிறபடி. ‘அவன் நினைவே காரியமாய்த் தலைக்கட்டுவது’ என்று அவனைக் காட்டிக் கேட்கிறாள். 5‘கேசவன் அநுகூலர் விஷயத்தில் மேன்மையைச் சிந்திக்கிறான்,’ என்கிறபடியே, அனுகூல விஷயத்தில் சிந்திப்பானும் அவனே அன்றோ? 6இங்ஙனே சிந்தித்தலாயே போமித்தனையோ, அறுதியிடல் முடிவாகக் கடவதன்றோ?

(4)

__________________________________________________________________

1. ‘‘திருவருளையுடையவரல்லர்’ என்று வெறுக்கிறது என்? ‘திருவருள்
  புரிதலையுடையோம்’ என்பது, நம்முடைய வடிவைப் பார்த்தாலே தெரியாதோ?’
  என்ன, ‘பிரஹ்மஹத்தியைகளை’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. ‘அருள் இல்லாதவனாயிருப்பின் பரமபதத்தில் இரேனோ? கோயிலிலே வந்து
  சாய்ந்த போதே ‘அருளுடையவன்’ என்பதனை எல்லாரும் அறியாரோ?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘தண்ணீர்ப் பந்தலிலே’ என்று தொடங்கி.

3. ‘என் செய்கின்றாய்?’ என்னாமல், ‘என் சிந்தித்தாய்?’ என்றதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘முற்றறிவினனுக்கும்’ என்று தொடங்கி.

4. அவனை விளித்து, ‘என் சிந்தித்தாய்’ என்று கேட்பதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘திருத்தாயார்’ என்று தொடங்கி.

5. ‘அவன் தான் அப்படிச் சிந்திப்பவனோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘கேசவன்’ என்று தொடங்கி.

        ‘ஸ்ரேயோ த்யாயதி கேஸவ:’ என்பது.

6. ‘சிந்தித்தாயே’ என்றதிலேயுள்ள ஏகாரத்துக்குப் பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘இங்ஙனே’ என்று தொடங்கி.