|
யவர
யவர்கள். ‘அந்தமிழின்பப்
பாவினை அவ்வடமொழியை’ என்கிறபடியே, இறைவன் இரு மொழிகளின் வடிவமாகவுமிருத்தலின், அவனைப்பற்றிக்
கூறுகின்ற இத்தமிழ் மறைக்கு உரை எழுதிய பெரியோரும் இருமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில்
எழுதலாயினர்.
திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி, ஒன்பதனாயிரப்படி, பன்னீராயிரப்படி,
இருபத்து நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்னும் ஐந்து உரைகள் உள்ளன. இவ்வுரைகள் ஒன்றற்கொன்று
விரிவுரையாக எழுந்தனவாகும். இவற்றுள், ஈடு முப்பத்தாறாயிரப்படியே பின்னர் எழுந்ததும் விரிந்ததுமான
உரையாகும் இவ்வுரை, ‘சொன்னோக்கும் பொருள் நோக்கும் தொடை நோக்கும் நடை நோக்கும் துறையின்
நோக்கோடு எந்நோக்கும் நோக்க இலக்கியமாய்’ அமைந்தது; கற்போர் மனத்தைக் கவருந் தன்மையது;
புத்தியும் பத்தியும் தோற்றுவிப்பது.
இத்தகைய இவ்வுரை மணிப்பிரவாளநடையில் அமைந்திருத்தலின், தமிழ் நாட்டினர்
அனைவர்க்கும் பயன்படாமலிருக்கிறது. இந்நிலைமை கருதி, உயர்திரு. செந்தமிழ்ச்செல்வர், தமிழவேள்,
உமாமகேசுவரன் பிள்ளையவர்கள் ‘அருமையான இவ்வியாக்கி’யானங்களைத் தமிழ் நடையில் எழுதினால்
என்னைப்போன்றவர்களும் கற்கலாமே!’ என்று, யான் திருவையாற்று அரசர் கல்லூரியில் தமிழ்த்தொண்டு
புரிந்த காலத்தில் என்னிடத்திற் கூறினார்கள். யான் சென்னைச் சர்வகலாசாலையில் தமிழ்ப்பணியேற்றுத்
தமிழ்த் தொண்டு புரிய வருங்காலத்தில் உயர்திருவாளர், திவான்பஹதூர்,
T. M.
நாராயணசாமிப்
பிள்ளை, M.A.,
B.L.,
அவர்கள்
(Chairman, Board of Studies, University of Madras, Chairman, Public Service
Commission, Madras)
திருவாய்மொழியின் வியாக்கியானத்தைத் தமிழ் நடையில் எழுதுங்கள் ; அது அனைவர்க்கும் பயன்படல்
வேண்டும்,’ என்று கூறியதனாலும், ஆழ்வாருடைய திருப்பாசுரங்களின் ஆழ்பொருளை ஆசையுடையாரனைவரும்
படித்துணர்தல் வேண்டும் என்ற பேரவாவினாலும் இத்தெய்வத் தமிழ்த்திருப்பணியை அடியேன் மேற்கொண்டேன்.
இருமொழிகளிலும் வல்லுநராய் வைணவமதத்தின் உண்மைப் பொருள்களை உள்ளவாறு
உணர்ந்தவராய் உணர்ந்தவாறே ஒழுகுபவராய் உள்ள ஒருவரே இதனை எழுதுதற்கு உரியவர் என்பதனை அடியேன்
நன்கு அறிவேன். ஒரு மொழியினையும் முற்றும் உணராத
|