அது
செய்யாது தன் உயீர் துறப்ப - இக்குற்றத்திற்குத் தீர்வு
அறநூற்படி மகனை நிறுத்துவித்தலே யாம் என்று தாம் அறிந்தவாறு
சொல்லிய அமைச்சர்களிலே தலைவனான இவ்வமைச்சனுக்குத் தன் மனதின்
உண்மைக்கு மாறுபாடான இச்செயல் செய்ய மனம் ஒருப்படவில்லை.
அன்றியும் உலகம் போற்றுங் குணத்தானாய்த் தவத்தாற் பிறந்த அரச
குமாரனாயும் தன் எசமானனாயும் உள்ள அவனைத் தேர்க்காலில்
ஊர்தலாகிய அரிய செய்கையில் அவன் மனம் துணியவில்லை. அரசன்
ஆணைப்படி செய்யாமல் இருந்து அதன் பொருட்டு அரசன் தன்னை
முறைசெய்ய நின்று மானம் அழிதற்கும் ஒருப்படவில்லை. ஆதலின் மனம்
துணியாத செய்கையைச் செய்வதைக் காட்டிலும் (மானம் அழிந்தபின்
வாழாமை முன்னினிது என்றபடி) உயிர் துறத்தலே மேலென்று தன்னரிய
உயிரைந் தானே துறந்து கொண்டனன்.
தன்னுயிர்
நீப்பினும் செய்யற்க, தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை - (குறள்) |
என்ற நீதியுங் காண்க.
தற்கொலை செய்துகொள்ளல் பெரும் பாவமேயாயினும்
தன் உயிரினும்
சிறந்ததாய்த் தான்கொண்ட கொள்கையும் மானமும் அழிவுபட வாராமற்
காத்தற்கும், (அரசன் ஆணையின்படி இருந்தபோதிலும்) இது கொலையே
யாதலின் அதன்பழி வாராமற் காத்தற்கும் உயிர் துறந்தனன். ஆதலின் இது
பாவமாதல் இல்லை என்க. இது பின்னர் இவன் உயிர்மீட்சிக்குக்
காரணமாதலும் காண்க இச்செயல் பற்றியே இம்மந்திரியை,
வேந்துமகத்
தேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான்
சோர்ந்துதன தாவிவிட்டான் சோமேசா - |
என்று மாதவச் சிவஞானமுனிவரர்
விதந்து எடுத்துக்காட்டியிருத்தலும் காண்க.
குலமகன்
- குலத்தைத் தன் வழிவழி நீடிக்கச் செய்யவல்ல மகன்.
மகனை அழைத்த அரசன் அவனை விசாரியாமலே தண்டம்
விதித்தல்
தகுதியாமோ எனின், இந்நிகழ்ச்சி யாவும் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
தொன்னெறி அமைச்சன் கூறியவாற்றாலும், பசு இடரால் வெவ்வுயிர்த்து -
கதறி - மணியை யெறிந்து - விழுந்ததனை நேரே கண்டதனாலும் உண்மை
தெரிந்து கொண்டான்; ஆதலின் வேறு விசாரணை வேண்டப்பெறவில்லை
என்க.
கொண்டு
- தண்டம் செய்தற்காக. மறுகு - வீதி. 43
| 129.
|
ஒருமைந்தன்
தன்குலத்துக் குள்ளானென்
பதுமுணரான் |
|
| |
‘தருமந்தன்
வழிச்செல்கை கட' னென்று
தன்மைந்தன்
மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்தன்;
அருமந்த அரசாட்சி அரிதோ? மற் றெளிதோ?
தான் |
44 |
(இ-ள்.)
மனுவேந்தன் - (அவ்வாறு அவ்வீதி அணைந்தானாகிய)
மனுவேந்தன்; ஒரு மைந்தன்...உணரான் - தனது குலத்தை வளர்த்து வழிவழிச்
செலுத்தற்குரியவனாய்த் தனக்கு மகனாயுள்ளான் இவ்வொருவனே என்ற
செய்தியையும் மனத்திலே உணராதவனாகி; தருமம் ... கடனென்று - தருமந்
தன் வழியிலே செல்வதே கடமை என்ற ஒரே எண்ணத்தை யுடையவனாய்;
தன் மைந்தன்...உற ஊர்ந்தான் - தன் மகனை அவ்வீதியிலே கிடத்தி
அவனுடைய மார்பிலே தனது தேர்ச்சக்கரம் ஏறிச் செல்லும்படி தனது தேரை
ஊர்ந்தனன்; அருமந்த...எளிதோதான் - உலகத்துக்கு அருமருந்து போன்ற
அரசாட்சி செய்வதுதான் செய்தற்கு அரியதோ எளியதோ என்பது
சிந்தித்தற்குரியது.
(வி-ரை.)
ஒருமைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும்
-
இவன் தனக்கு ஒரே மகனாதலின் இவனைத் தேர்க்காலில் ஊர்ந்துவிடில்
தனது குலம் வழிவழிச் செல்ல வேறு மகனில்லாது தன்னோடு நின்றுவிடும்
என்ற செய்தியினையும்.
|