|
(இ-ள்.)
பனி........முடி மாலையும் - குளிர்ந்த வான
உலகத்தில்
உள்ள தேவர்கள் வணங்கிச் சூழ்கின்ற அனேகமாகிய கிரீட வரிசையும்;
புனிதம்......அரிமாலையும் - தூய
கற்பகக் பூக்களாற் கட்டப்பட்டுப் பொன்
இழைகள் கூடிய பூமாலைகளும்; முனிவர் அஞ்சலி மாலையும் - முனிவர்கள்
கும்பிட்டு நிற்கும் வரிசையும் முன்னெலாம் - முன் பக்கங்களில்
நிறைந்துள்ளன.
(வி-ரை.)
மேற்பாட்டிலே காதுக்குப் புலப்பட்டுக் கயிலையின்
மருங்கெலாம் நிகழ்காட்சி கூறினார். இப்பாட்டிலே கண்ணுக்குப் புலப்பட்டு
முன்னெலாம் உள்ள காட்சி கூறுகின்றார். அங்கு முன்புறம் காணப்படுவன
மூன்றுவகை மாலையாம். அவை அணி முடிமாலை, பொன் அரிமாலை,
அஞ்சலிமாலை என்பன. இவற்றில் அரிமாலை பூமாலையாம். ஏனை யிரண்டு
மாலையும் வரிசை என்ற பொருளில் வந்தன. அமரர்கள் தத்தமக்கேற்ற
கிரீடங்களுடன் வணங்கும்போது வரிசையாய் நின்று முடிசாய்த்து வணங்கவும்,
ஒருபுறம் முனிவர்கள் நின்று வரிசையாய்க் கைகூப்பி வணங்கவும் உள்ள
காட்சியின் வரிசைகளையே மாலைகள் என்றார். திருக்கோயிலின்முன்
வரிசையாய்த் தகுதிக்குத் தக்கபடி வகுத்து, நின்று, வணங்கும் ஒழுங்கும்
விதியும் குறித்தவாறுமாம். இக்காலத்தில் ஆலய தரிசன விதி தவறித்
தாறுமாறாய் நின்று அபசாரமே செய்யும் மாக்கள் இதைக் கூர்ந்து
கவனிப்பார்களாக.
பனிவிசும்பில்
அமரர் - குளிர்ச்சி பொருந்திய தேவலோக
வாசிகளாகிய தேவர்கள் என்க. விசும்பிலிருந்தபடியே அமரர்
பணியத்தக்கதாம் மிக உயர்ந்த திருமலை என்று கொண்டு உரைத்தலும்
ஆம். இப்பொருளில் அமரர் பனிவிசும் பிற் பணிந்து சூழ என்று மாறிக்
கூட்டுக. சூரபன்மா முதலியோரால் அவ்வப் போது அலைப்புண்டு
பனிக்கின்ற (துன்பப்படுகின்ற) விசும்பு என்றுமாம். அவ்வாறு துன்பப்படுகின்ற
காலத்தில்தான் கயிலைக்குச்சென்று இறைவனிடம் முறையிட்டுத்
தவங்கிடப்பதும், ஏனைக்காலத்தில் மறப்பதும், இந்திரன் முதலிய தேவர்
செயலாதல் கந்தபுராண முதலியவற்றிற் காண்க. மந்தாகினித் திவலை
(ஆகாயகங்கை) யாலும், கற்பகச்சோலை முதலியவற்றாலும்
விசும்பிற்குக்
குளிர்ச்சியாம். தேவவுலகம் மேல் உலகமாதலாலும் மேலே உயர்ந்து செல்லச்
செல்லக் குளிர்ச்சி அதிகமாதலாலும் பனி விசும்பு ஆம். அமரர் - (ம்ரு -
மரணம்.) மரணமில்லாதவர். மற்ற உயிர்களை நோக்க ஏகதேசத்தில்
அதிககாலம் மரணமில்லாதவர்களேயன்றி எக்காலத்தும் இறவாதவர்கள்
என்பதன்று. இறவாதவன் சிவபெருமானகிய இறைவன் ஒருவனேயாம்.
“ஈறிலாதவன் ஈசன் ஒருவனே”
(தேவாரம்). நீண்ட ஆயுளுடைமைபற்றி
உபசார வழக்கினால் அமரர் (மரண மற்றவர்) எனப்படுவர்.
அனிதகோடி
- அனிதம் - அனேகம். தேவர்கள் முப்பத்து முக்கோடி
என வகுத்திருக்க அனேககோடி என்றதெவ்வாறெனின், - “நால்வேறு
இயற்கைப் பதினொரு மூவரொடு” (திருமுருகாற்றுப்படை) என்றபடி தேவர்கள்
நான்கு வகையினராய் அவற்றில் 33 உட்பிரிவுடையராய் உள்ளார். ஆதித்திய
வமிசம் 12. உருத்திர வமிசம் 11. வசுக்கள் வமிசம் 8. அசுவினி தேவர் வமிசம்
2. இவர்கள் பிரமதேவ சிருட்டியிலே காசிப முனிவரது இருமனைவியருள்
திதி என்பவள்பால் தோன்றியவர். திதி என்ற மற்ற மனைவியிடம்
தோன்றியவர் தைத்தியர் என்ற அசுரர். சுர - நுரை. “வாருணி நறவம்
பிறந்தது மற்ற துண்டலால் சுரராயினர்” (கூர்மபுராணம்); நுரையாகிய
அமிர்தமுண்டதால் சுரர் என்ற பேர்பெற்றனர். 33 கோடியாகிய இவர்களுடன்
உலகத்திலே புண்ணியங்கள் செய்து தேவர்களாகும் எண்ணில்லாத
உயிர்களும் கூடுவதால் அனேக கோடியாகுவர். கயிலையின் முன்பக்கத்தில்
வரிசையாகத் தேவர்களும் முனிவர்களும் தொழுது நிற்பர் என்பது கருத்து.
|