பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்375

Periya Puranam

     (இ-ள்.) எந்தையார் தம் திருக்கண்........தொடுப்பதே -
எந்தையார்தமது நெற்றித் திருக்கண்ணின் தீயிலே பட்டு வெந்துபோன
மன்மதன் வெளிப்பட உருக்கொண்டு இங்கு என் முன்னே வந்து நின்று
அம்பு எய்வதா? (தொடுக்க வன்மையு முடைய வனாவதா?); அருள்
இவ்வண்ணமோ? - அவரது திருவருளும் இத்தன்மை யுடையதாமோ?;
என்பார் - என்று உட்கொண்டு இயம்பி, மேலும் மொழிவாராயினார்.

     (வி-ரை.) திருக்கண் - கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்க
முடைமையால் திருக்கண் என்றார். “நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே“ என்பது அப்பர் பெருமான் திருவாக்கு.
(கோயிற்றிருவித்தம் - 8) “நெற்றியிற் றிகழ்ந்த ஒற்றை நாட்டமும்“ என
அருளினார் பட்டினத்தடிகள். இது சிவபெருமானுக்கே உரியதாதலின் வேறு
அடைமொழியின்றித் திருக்கண் என்றார்.

     எரிதழல் - பிறிதின் இயையு நீக்கிய விசேடணம். “இருநோக்
கிவளுண்கண் உள்ள“ என்றபடி இக்கண்ணின் தழலுக்கு எரிக்காது குளிர்ச்சி
செய்து காக்கும் குணமுமிருத்தலின் அதனின்றும் பிரித்து வேறு தன்மையைக்
கொண்ட தழல் என்றார். அடுக்களையின்கீழ் வைத்த தழல் பாகம் செய்தும்,
கூரையில் வைத்த தழல் வீட்டை எரித்தும் தொழில் செய்தல்போலக் காண்க.
ஆதலின் தீ சுடும் என்று கூறும் பொருளியல்புக்கும் மாறுபாடிலாமையுங்
காண்க.

     வெளியே உருச்செய்து - வெந்த காமன் பின்னர் உயிர்
பெற்றானாயினும் உருவிலனேயாவன். ஆனால் இவன் அவ்வாறன்றி
உருவத்துடன் கூடினன் என்க. உருவத்துடன் கூடுதலாவது, செயல்
மிகுதியால் உருத் தோன்றுதல். என்முன் - என் முன்னால் வரவுங்கூடாத
இவன் என் முன்னரும் வர வல்லனாய். சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது.

     வாளி தொடுப்பதே - முன் வருதலே பெருங் காரியம்; அதன் மேலும்
வாளியும் தொடுக்க வல்லனாவதா? என்க. வருதலேயன்றி என இறந்தது
தழுவிய எச்சவும்மை தொக்கது.

     எந்தையார் அருள் இவ்வண்ணமோ - எமது தலைவனாருடைய
திருவருளும் இவ்வாறாவதொன்றோ? திருவருளின் முன் வரவும், நிற்கவும்,
வாளிதொடவும் மாட்டாதவன் மதனன். தம்பிரான் தம்மையே தோழனாகத்
தந்த திருவருள் நிரம்பிய என்முன் வந்து நின்று வாளி தொடுப்பதாயினன்.
அவனன்றி ஓர் அணுவு மசையாதாதலின் இதுவும் அவர் திருவருளின் ஒரு
வண்ணமோ? என்பது. எந்தையுடைய ஆர் (நிரம்பிய) அருள்
என்றலுமாம். 164

311. “ஆர்த்தி கண்டுமென் மேனின் றழற்கதிர்
 
  தூர்ப்ப தே! யெனைத் தொண்டுகொண்
                           டாண்டவர்
நீர்த்த ரங்க நெடுங் கங்கை நீண்முடிச்
சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி!“
165

     இது சந்திரனை நோக்கிக் கூறிய கூற்று. சந்திரோபாலம்பனம் என்பர்.

     (இ-ள்.) ஆர்த்தி........தூர்ப்பதே! - துன்பத்தைக் கண்டபின்னும்
மேலும்மேலும், எப்போதும் போல் உனது போக்கின்படியே போகாமல்
நின்று, உனது இயல்பான குளிர்ந்த கிரணமல்லாது இயல்புக்கு மாறான
வெப்பக் கதிர்களைத் தூவுவதா!? எனை.......போன்றிலை - எனைத் தடுத்து
ஆளாகக் கொண்ட இறைவன் தனது நீர்மை பொருந்திய அலைகளையுடைய
நெடிய கங்கை சூடிய நீண்ட முடியிலே அருளினால் எடுத்து அணிந்து
கொண்ட வெள்ளிய சந்திரனைப்போல் நீ அமைந்தா யில்லையே;
தண்மதி! - ஏ! குளிர்ந்த இயல்பினையுடைய சந்திரனே! (தண்மதி -
அண்மை விளி).