|
கேள்வி ஞானத்தாலே
அறியுமாறு. தீண்டிக்கொண்டு உடன் மூழ்காமையே
இங்குக் கேட்பிக்க நின்ற பொருள்; அதற்குத் தீண்டாமை காரணம்;
அதற்குத் திருநீலகண்டத்தின்மேல் வைத்த ஆணை காரணம்; அதற்குத்
தாம் திருநீலகண்டத்தின்பாற் பத்தி செய்தமையும் பரத்தை பாலணைந்ததும்
காரணம்; என இவ்வாறு தீண்டி மூழ்கக்கூடாமையை விளக்கும் பொருட்டு
நாயனார் பண்டு நிகழ்ந்த செய்கையெல்லாம் சொல்ல வேண்டியதாயிற்று.
ஆதலின் பண்டு தம் செய்கை சொல்லி என்றார். செய்கை
- நிகழ்ச்சி - .
செய்கையெல்லாம். கேட்கச் - சொல்லி
என இசைக்க.
ஆயின் இதுகாறும் நாயனார் தமது செய்கையைப் பாரோர்
அறியாமை வாழ்ந்ததன் காரணம் என்னை? எனின், உலகர் அறிந்தால்
தமது அறியாமை யாலே பலவும் சொல்லிச் செந்நெறியினின்று தம்மைப்
பிறழவைக்க முயன்று பலவகையானும் இடர்ப்படுத்துவர். இதுபற்றியே
மகனைக் கறி சமைக்க முற்பட்ட சிறுத்தொண்ட நாயனார் தமது செய்கை
செய்வதனை உலகர் காணில் அறியாமையால் இடர்ப்படுத்துவர் என்று
மறைவிற் கொண்டுவைத்து அதனைச் செய்தனர் என்றறிகின்றோம்.
உலகர் அறியாமையையுடையர் என்பதாம்.
| “ஒன்று
மனத்தாரிருவர்களு முலக ரறியா ரென்மறைவிற் சென்றுபுக்கு“ |
| -
சிறுத்தொண்டர் புராணம் - 62 |
அன்றியும்
திரு ஆணையைப் போற்றும் இந்நிகழ்ச்சி இறைவனருள்
வழியே நின்ற தாமும் அவ்விறைவனுமே யறிய நின்றது. இறைவனருள்
தம்பாற் செல்லும் அருளிப்பாடுகளை வெளிப்படுத்தல் முறையன்று என்பது
நூற்றுணிபும் மரபுமாம். “அருளுடையா ரளித்தருளுஞ், செவ்விய பேரருள்
விளம்புந் திறமன் றென் றுரைசெய்யார்“ என்ற காரைக்காலம்மையார்
புராணமும் (27) காண்க.
இவ்வாறு உலகறியாது நிகழும் ஒழுக்கத்தில் நிற்கும்
நாயனாரது
செயலில் இறைவனது திரோதான சத்தியும் உடனிருந்து உதவியது.
இப்போது அது வெளிப்படும் சமயம் வந்தபோது பாரோர் கேட்கச்
சொல்லும் அந்நெறியிலே அவர் நிற்குமாறு இறைவர் அருள்நோக்கம்
வைத்து யோகியாராய் வந்து ஆணையிட்டார். இதுபற்றியே “கங்கைநதி
கரந்தசடை கரந்தருளி“ (388), “கறைமருவுந் திருமிடறுங் கரந்தருளி
(392) என முன்னர்க் குறித்தனர். அருட்சத்தி பதியவே வெள்ளத்திற்பட்ட
துரும்புபோல உயிர் தன் வசமிழந்து அருள்வழியே நிற்கும். அதனால்
இங்கு முன்னர் அயலறியாது ஆணை உய்த்த நாயனார் இப்போது பாரோர்
கேட்கப் பண்டுதஞ் செய்கை வெளிப்படச் சொன்னார் என்க.
பாரோர் கேட்க
- சபதம் செய்வதைக் காணக்கூடிய உலகத்தாரும்
அவர்கள் மூலம் பின்னர்க் கேட்கும் உலகரும் கேட்டறியும்படியாக.
இந்நாளிலும் இவ்வாறு நீதிமன்றம் - கோயிற்
சந்நிதி முதலிய
ஆணையிடுகின்ற இடங்களில் உலகர் திரண்டு கூடும் இயல்பும் காண்க.
மூழ்கினார்
- தண்டின் இருதலையும் பற்றிக்கொண்டு மூழ்கித் தந்தார்.
பழுதிலாதார்
- நாயனார் சரிதத்தின் முன் நிகழ்ச்சிகளில்
எவ்வாற்றானும் பழுதில்லாதவர். இதன் பின் நிகழ்ச்சியானும்
பழுதில்லாதவராயினர். “சேணிடையுந் தீங்கடையாத் திருத்தொண்டர்“
(393) என்றதும் காண்க. “இளமை மீதூர இன்பத்துரையினி லெளிய“
ராய் ஒரு பரத்தை பாலணைந்தமையானும் பழுதில்லாதவர்; மற்றை
மாதரார் தமையுமென்றன் மனத்தினும் தீண்டேன்“ என்றமை யானும்
பழுதில்லாதார்; “அற்புறு புணர்ச்சியின்மை அயலறியாமை வாழ்ந்த“
அதனானும் பழுதில்லாரே; மூழ்கித் தந்தமையாலே யோகியார் “உன்பால்
வைத்த அடைக்கலப்பொருளை வௌவிப் பாவகம் பலவுஞ்செய்து பழிக்கு
நீ யொன்று நாணாய்“ என்று கூறிச் சுமத்திய பாவகமாகிய பழுதும்
இல்லாதாரேயாயினர்; இனியும் தாம் பிறவியாகிய பழுதினையில்லையாக்கி
மீளாநெறியிலே இறைவன்பால் என்றும் இளமையோடிருக்க
நிற்கின்றாராதலின் முற்றும் பழு
|