பக்கம் எண் :


592 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     தொண்டராம - உண்மையிற் றொண்டரன்றென்பது குறிப்பு.

     குவித்த செங்கை கொண்டெழுந்து - கூப்பிய கைகளைக்
கண்டார்களே யன்றி அதன் முன்னே கைகூப்பிய தொழிலை எவரும்
கண்டாரில்லை என்பது குறிப்பு. இஃது கைகூப்புதலின் விரைவுபற்றிக்
கூறியதாம். ஆதலின் கைகுவித்துக் கொண்டு என்னாது, குவித்த செங்கை
கொண்டு என்றார். “கருங்குழற்கற்றை மேற்குவி கைத்தளி ருடையார்“
(திருஞா - புரா - 670) என்றதுங் காண்க.

     கொள்கையின் வணங்கி - கருத்தறிந் தேவல்செய்தும், அன்பர்
தாளலாற் சார்பொன்றில்லா தொழுகியும் கைக்கொண்டுவந்து தமது
கொள்கையின்படி வணக்கஞ்செய்து. வணங்கி - ஐந்துறுப்பு முதலியனவாய்
விதிப்படி செய்யும் வணக்கங்கள்.

     நின்று - அடியவர்கள் முன்பு அமராது, நின்று பணிகேட்டு
முறைப்படி நின்று கொண்டு. நின்று என்ற வினையெச்சம் வரும்பாட்டிற்
கூற என்றதனுடன் முடிந்தது.

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன. கண்டு - சென்று
- அணையும்போது - தேவி - எழுப்பிட - மன்னன் உணர்ந்து - எழுந்து -
சென்று - வணங்கி நின்று - “என்கொலோ“ என்று கூற - “நூல் - இயம்பக்
- கொடுவந்தேன்“ - என்றான் - என முடித்துக்கொள்க. வன்கணான -
என்ற எழு வாய் தொக்கது.

     எழுந்து தேவி - கொண்டிழிந்து - என்பனவும் பாடங்கள். 11

     478. (இ-ள்.) - மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து
அணைந்தது
- மங்கலம் பெருக - இஃது மங்கல வழக்காகப்
பின்நிகழ்ச்சிக் குறிப்பாய்ப் பிறிதொரு அமங்கலப் பொருள் தொனிப்பது
காண்க. வாழ்வு வந்து - வாழ்வே ஓர் உருப்பெற்று என் முயற்சியின்றித்
தானே வந்தது, வாழ்வுக்கு இறுதி எல்லையாகவந்து என்ற குறிப்புமாம்.

     அருளப் பெற்றதென் கொலோ? - தேவரீர் இதுபோழ்திலே இங்கு
வந்த காரியம் யாது? என்ற சொன்னயமும், அடியார்பால் வணங்கி
வினாவும் மரபும் காண்க.

     உங்கள் நாயகனார் - இங்கு உங்கள் என்பது மிக்க உரிமைப்பாடு
குறிப்பதோர் வழக்கு. “இசையாழ் உங்க ளிறைவருக்கிங் கியற்றும்“
(திருஞான - புரா - 134); “அப்பர்! உங்கள் தம்பிரானாரைநீர் பாடீரென்ன“
(திருநா - புரா - 186) என்ற இடங்களில் தமக்கு உரிமையுள்ள
தோணியப்பரை, ஆளுடைய பிள்ளையார், திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும்,
திருநாவுக்கரசு நாயனாருக்கும் தம்மிலும் உரிமையுடையராக்கி உரைத்த
சொல்லாட்சிகள் காண்க. உலக வழக்கிலேயும் பெண்கள் தமக்குரிய
நாயகனைப்பற்றிப் பேசும்போது முன்னிற்பாருக்கு அவனது மிக்க உரிமை
புலப்படுமாறு உங்கள் அண்ணன்; மைத்துனர்; என்று குறிக்கும் வழக்கும்
காண்க. ஆயின் இங்கு முத்தநாதன் அந்நாயகனார்க்குத் தொடர்பில்லாமற்
புறம்பாயினவன் என்று குறிப்புத் தருதலுங் காண்க.

     முன்னம் - சிருட்டியாரம்பத்திலே, ஆகம நூல் - ஆகமம். (1)
உயிர்களின் பாசம் போக்கி வீடு தருவது, (2) பதிபசுபாச இயல் தெரித்து
உண்மை உணர்த்துவது என இருவகையிலும் இதற்குப் பொருள் கூறுவர்.

     மண்மேல் எங்குமில்லாதது - இவன் ஏந்திய படையாகிய நூல்
உண்மையில் மண்மேலன்றி, விண், பாதலங்களிலும் எங்கும்
இல்லாததொன்றேயாம். அப்படையினை ஆக்கிய கரும்பொன்னும்
மண்ணினுள் இருப்பதன்றி மண்மேல் உள்ள தன்று என்பதுமாம்.
மண்மேல் ஒருவரும் இதுவரை அறியாதது என்றலுமாம்.

     இயம்பக் கொடுவந்தேன் - என்று மாற்றுக. இவ்வாறன்றிச்
சொன்மாறிக் கூறுதல் அவனது உள்ளக்கரவினால் உளதாகிய தடுமாற்றங்
குறித்தது. இதனால் உறுதி பயக்கும் ஞானங்கள் காலமிடம் கருதாது
எக்காலத்தும் எவ்விடத்தும் கேட்கத்தக்கன என்ற விதியினை அவன்
குறித்து உரைத்தான் என்பது.  12