பக்கம் எண் :


608 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
கொண்டு, முறையானே அடுத்து வரும் நாயனார் சரிதம் கூறப்புகுகின்றேன்
என்ற முன் சரிதத்தை முடித்துக் காட்டி, வருஞ் சரிதத்திற்குத் தோற்றுவாய்
செய்தல் ஆசிரியரது பெரு வழக்கான மரபாம். அது பற்றி இங்ஙனம் மாற்றி
உரைக்கப்பெற்றது. அவ்வாறல்லாது சொற்கிடக்கை முறையிலே வைத்து,
விறன்மிண்ட நாயனார் திருவடியினையே துதித்துச் சூடிக்கொண்டு அவர்
சரிதம் சொல்லப்புகுகின்றேன் என உரைப்பினு மிழுக்கில்லை.
திருத்தொண்டத் தொகைக்குக் காரணரா யிருந்த சிறப்புப் பற்றி ஆசிரியர்
இவ்வாறு கூறினார் போலும். “அருந்தமிழாகரர் சரிதை யடியேனுக் கவர்பாதந்
தரும் பரிசாலுரை செய்தேன்“ முதலியனவும் காண்க. 24


     சுருக்கம் :- சேதிநாட்டிலே திருக்கோவலூரைத் தலைநகராகக்
கொண்டு மலையமான் என்னும் பரம்பரைச் சைவ அரசமரபினர் நாடாண்டு
வந்தனர். அந்த மரபில் அவதரித்தவர் மெய்ப்பொருணாயனார். அவர்
வேதநெறியின் வாய்மை விளங்க ஒழுகுபவர்; சிவனடியார் கருத்தறிந்து
அவர்களுக்கு ஏவல் செய்வார்; அரசியல் அறநெறி காத்துப் பகையரசர்களைத்
தமது வன்மையினாற் செயிப்பார்; அன்பர் திருவேடமே சிந்தை செய்வார்;
சிவபெருமான் திருக்கோயில்கள் எங்கேயும் நித்திய பூசையும்
திருவிழாக்களும் வழாமல் நடைபெறச் செய்து வாழ்வார்; அடியார்களது
திருவடிகளை யன்றி வேறு சார்பில்லார்; தமது செல்வங்கள் எல்லாம்
அடியார்களுடையனவே எனக் கொண்டவராய் அடியார்கள் வந்தபோது
மகிழ்ச்சியுடன் குறைவறக் கொடுத்து வருவாரானார்

     இவ்வா றொழுகு நாளில், ஒரு அரசன், இவரை வெல்லும்
ஆசையினாலே போரிலே இவரை எதிர்த்துப் பலமுறையும் தோல்வியுற்றுத்
தனது சேனைகளையுமிழந்து அவமானப்பட்டுப் போனான். இப்படி யிழந்த
பகைவன், நேரிற் போர் செய்து வெல்லமாட்டாதவனாய், மெய்ப்பொருள்
மன்னரது சைவ சீலத்தையறிந்து, திருநீறு சாத்தும் அப்பெருவேடங் கொண்டு
வஞ்சனையினால் வெல்ல வேண்டுமென்று, சொல்லவுந் தகாத நிலையை
யெண்ணி, அதற்காக உடம்பு முழுதும் திருநீறு பூசி, சடைமுடித்துக் கட்டிக்
கையிலே படையை மறைத்துக் கட்டிய புத்தகப் பையை ஏந்திக்கொண்டு,
மையை உட்பொதிந்த விளக்குப்போல மனத்துள்ளே வஞ்சக்கறுப்பு வைத்துப்,
பொய்தவ வேடம் கொண்டு முத்தநாதன் என்ற அவ்வரசன்
திருக்கோவலூரினுட் புகுந்தவனாய், ஆடற் பெண் கொடிகளும் மேலே
வெண்கொடிகளும் ஆடும் மாடங்கள் நிறைந்த திருவீதி வழியே சென்று
அரசரது அரண்மனை வாயில் சேர்ந்தான். வாயிற்காவலர்கள் அடியவர்தாமே
எழுந்தருளினர் என்று உள்ளே புகவிட்டனர். வாயில் பலவும் புகுந்த
பின்னர்க் கடைசிவாயிலிற் காவல் செய்திருந்த தத்தன் “சமய நோக்கி
அருள் புரியவேண்டும்; இறைவன் துயில் கொள்ளும்“ என்றான்.
“நான்இவற்கு உறுதி கூற வந்தேன், ஆதலின் ஏனையோர் போல நீயும் நில்“
என்று அவனையும் கடந்து உட்புகுந்தான். கட்டிலிலே அரசர் துயிலவும்
பக்கத்தே மாதேவி யிருப்பவுங் கண்டு பக்கத்துச் சென்றணைந்தனன்.
அதுகண்டு மாதேவி எழுந்து அவரை எழுப்பினர். சிவனடியார் வந்தனராகும்
என்றுணர்ந்த மன்னர் கைகூப்பித் தொழுதெழுந்து வணங்கி நின்று
“மங்கலம்பெருக என்வாழ்வு வந்தணைந்தது போல இங்கு அடிகள்
வந்தருளியது யாது கருதியோ?“ என்று கூற, அவன், “உங்கள் நாயனார்
முன்னே அருளிய ஆகம நூல் மண்மேல் எங்கும் இல்லாததொன்று உனக்கு
உபதேசிக்கக் கொண்டுவந்தேன்“ என்றான். “இதன் மேல் வேறு பேறும்
எனக்குண்டோ? இறைவன் அருளிய ஆகமத்தை வாசித்தருள் செய்க!“ என
அரசர் கேட்க, அவன், “தேவியார் இங்கிருப்பது தவிரவும், நானும் நீயும்
(அதற்காக) வேறிடத்திலே இருக்கவேண்டும்“ என்றான். அவ்வாறே அரசர்
மாதேவியாரை விரைவாக அந்தப்புரத்திடைப் போக ஏவிப், பின்,
தவவேடத்தானை ஆசனத்தில் இருத்தித்;