பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1099

 

     ஒருப்பாடு - ஒருமை நண்ணிய அன்பின் துணிபு. தமது மற்றைக்
கண்ணையும் தோண்ட ஒருப்பட்டுக் கண்ணப்பர் அம்பு ஊன்றலும்
தேவதேவர் தரித்திலராகி அந்தக் கையினைப் பற்றிக்கொண்டனர் என்ற
சரிதம் இங்கு நினைவுகூரத்தக்கது.

     இதற்கு இவ்வாறன்றி, நாயனார் பூட்டி இளைக்கப் பார்த்திருந்து
அதன்பின் சாய்வுமாறி நேர்நிற்றல் தகுமா? ஆதலின் அவ்வாறு இளைக்கு
முன் ஒருப்பாடு கண்டபோதே நேரே நின்றார், அண்ணலாராதலின்;
என்றுரைப்பதுமொன்று. இப்பொருளில் இளைத்தபின் திறம்பிநேர்நிற்றல்
பெருமைக்குத்தகாதுஎன்றதாம்.

     அண்ணலார் - அன்பினிற் றாழும் பெருமையுடையார். அப்பெருமை
விளங்கிய இடமாதலின் இங்கு இப்பெயராற் கூறினார்.

     ஆர்த்தார் - ஆர்த்தவர்களாகி. முற்றெச்சம். ஆர்த்தாராகிப் பாரில்
எங்கும் பூமாரி பரப்பினர் என வரும்பாட்டுடன் கூட்டிமுடிக்க. இதனை
வினைமுற்றாகவே கொண்டும், பரப்பினர் என்றதற்கு எழுவாய் வருவித்தும்
உரைப்பாருமுண்டு. 28

     859. (வி-ரை.) பயில் பூமாரி பார்மிசை எங்கும் நெருங்கப்
பரப்பினர்
என்று கூட்டிக்கொள்க. பயில் - பழகிய. பரப்பினர் - மிகப்
பெய்தலால் எங்கும் இடையில்லாது நிரப்பினர்.

     தேர் மலி தானை - மன்னனுக்குச் சிறப்பு அடைமொழி. அங்குத்
தேர்ப்படை வந்தன என்பதன்று.

     கார்பெறு கானம் போல - மழை காணாது வாடி மழை பெய்யப்
பெற்ற உடனே செழித்த சோலை போல. கார் - கருமை நிறத்தின் பெயர்
அந்நிறத்தையுடைய மேகத்துக்காகிப், பின்னர் அம்மேகம் பொழியும்
மழைக்காயிற்று. இரு மடியாகுபெயர். இறைவன் திருமேனியை
நேர்காணமாட்டாது இளைத்த யானை சேனைகள் தாம் விரும்பியிருந்து
வாடிய செய்தியாகிய நேர்காணுதலைக் கிடக்கப்பெற்று மகிழ்ந்ததற்குப்,
பயன்பற்றி வந்த உவமம்.

     கைகள் கூப்பி என்றது, முதலில் நின்றபடியே கைகூப்பி
வணங்குதலையும், மலரடி தலைமேல் வைத்து என்றது, பின்னர் நிலத்தில்
உடல் தோய வீழ்ந்து வணங்குதலையும் குறித்தன.

      வார் கழல் வேந்தன் - மலரடி தலைமேல் வைத்து -
வெற்றிக்கடையாளமாகக் காலில் தான் வீரக்கழல் அணிந்து, முடிமன்னர்பிறர்
தன்னடியில் வணங்க நிற்கும் அரசன் தன் தலையை நாயனாரது திரு
அடியில் வைத்து வணங்கினான் என்று நாயனாரது சிறப்புக் குறித்தபடி. 29

      860. (வி-ரை.) விண் பயில் - ஆகாயத்திற் பறந்து சென்று பழகிய,
பயிலுதல் - இங்கு இலகுவிற் சென்று வருதல் குறித்தது. பொன், வெள்ளி,
செம்பு இவற்றானியன்ற மதிலுடைய மூன்று ஊர்களைத் தம் இடமாகக்
கொண்டு, அசுரர்கள், அந்நகரங்களோடு ஆகாயத்திற் பறந்து சென்றும்
இறங்கியும் அங்கங்குப் பல ஊர்களையும் உயிர்களையும் கீழ் அழுத்தி
அழித்தனர் என்பது புராண சரிதம்.

     வைதிகந் தேர் - திரிபுரமெரித்த காலையில் இறைவன் ஏறிய
தேருக்குக் குதிரைகளாக வேதங்கள் அமைந்தன என்பது சரிதம். "வேந்தன்
வளைத்தது மேரு வில்லரவு நாண்வெங்கணை செங்கண்மால், போந்த
மதிலணி முப்புரம் பொடிபட வேதப் புரவித்தேர், சாந்தை முதலயன்
சாரதி" (சேந்தனார் - திருவாவடுதுறை - 6), "மருளா, ரிடங்கொண்முப்
புரம்வெந் தவியவை திகத்தே ரேறிய வேறுசே வகனே" (திருமாளிகைத்
தேவர் - க - கோயில் - 10) என்ற திருவிசைப் பாக்கள் காண்க.

     மேருத் திண் சிலை குனிய - மேருமலையே வில்லாக வளைய.
சிலை - மலை எனவும் வில் எனவும் இரு பொருளும் பட நின்றது. குனிதல்
- வளைதல். "கற்றூண்,