செய்து திருவம்பர்த்தலத்தை
வணங்கிக்கொண்டு வரும் வழியில் இங்கு
எழுந்தருளித் தரிசித்தனர். இங்கு நின்றும் திருவாக்கூர், திருமீயச்சூர்
திருப்பாம்புரம் முதலிய தலங்களை வணங்கித் திருவீழிமிழலை சேர்ந்தனர்
என்பது சரிதம்.
கூட
எழுந்தருள - ஒன்றுகூடி வர. பெரியோர்களது வருகையை
இவ்வாறுபசரித்துக் கூறுதல் சைவமரபு. இப்பெரியோர்கள் கூடிச்செய்த
யாத்திரை வழிச்செலவில் இவர்கள் ஒன்றாகச் செல்லாது அரசுகள்முன்னரும்,
அவரைப் பின்பற்றிப் பிள்ளையாரும் செல்லுதலும் தலங்களிற் சேர்தலும்
முறை. ஆயினும் இருவரும் தலங்களைக் கூடித் தரிசித்துச் சென்றதனால்
கூட என்றார். 32
863.
(வி-ரை.) மாறிலா மகிழ்ச்சி
பொங்க - ஆர்தருகாதல் கூர
அடியவர்களுக்கு நாளும் திருவமுதூட்டும் (852) தன்மையுடைய கலயனார்,
பேரடியார்களும் பரமாசாரியர்களுமாகிய இரு பெருமக்களும் கூட
எழுந்தருளக்கண்டபோது இதுவரையுமில்லாத ஒப்பற்ற மகிழ்ச்சி மேன்மேற்
பொங்க நின்றனர் என்பது இயல்பேயாம். அடியார்களை அமுதூட்டப் பணி
செய்ததன் பயனாகவும் அதற்குப் பரிசாகவும் இது எய்தியதென்று எண்ணி,
மாறிலா மகிழ்ச்சி பொங்கினார் என்பதுமாம்.
ஈறுஇலா
அன்பின் மிக்கார்க்கு - எல்லையற்ற - அளவு
காணமுடியாத - அன்பினால் மிகுந்தவர்களாகிய அவ்விரு பெருமக்களுக்கும்.
அவர்களது அன்பின் மிகுதியினாலன்றே, அவர்களை இறைவன்
ஆட்கொண்டனர்; அவர்கள் உலகை ஆட்கொள்ளும் பரம ஆசாரியர்களாக
விளங்கினர் என்க.
ஏற்கும்
ஆற்றல் ஆறு நற்சுவைகள் ஓங்க இன்னமுது அமைத்து
என்க. ஏற்கும் ஆற்றால் பேரடியார்கள்
என்ற தன்மைக்கும், அதற்கு
மேலாகச் சிவனாலாட் கொள்ளப்பட்ட பரமாசரியர்கள் என்ற தன்மைக்கும்
தக்கபடி. "பிள்ளையாரெழுந்தருளிய பெருமைக்குத் தக்க" என்ற திருநீலநக்கர்
புராணம் (27) காண்க. நற்சுவைகள் ஓங்க -
வெறும் நாவின்
சுவையாலன்றிக் குணத்தாலும் உயர்வுடைய என்பார் நற்சுவை
என்றார்.
இன்அமுது - இன் - இனிய. இதனால் அமுதுக்கான உணவுப்பண்டங்களின்
இனிமை, அமுது அமைத்தலின் இனிமை, அன்பின் இனிமை முதலியன
எல்லாம் அடக்கிக்கொள்க. 443 - 852 முதலியவை பார்க்க.
அவர்
அருளேயன்றி ..... நம்பர்தம் அருளும் பெற்றார் -
முன்னர்க் கலயனார் அடியார்களை இனிய திரு அமுதூட்டிய வகையால்
சங்கமவழிபாடு செய்து அவர்களருள் பெற்றனர்.
அதுகாரணமாகப்
பரமாசரியார்களாகிய இரு பெருமக்களது அரிய சேவையும் கிடைக்கப்பெற்று
வழிபட்டுக் குருவருள் பெற்றனர். அதனால்
அதன் வழியே இலிங்க
வழிபாட்டிற் கிடைக்கும் சிவனருளும் பெற்றனர்.
இவ்வாறு குரு லிங்க
சங்கம மென்ற மூவகை வழிபாடுகளின் அருட்பேறும் கலயனார் ஒருங்கே
பெற்றனர் என்பதாம்.
அன்பின்
மிக்கார்க்கு ..... அமுது அமைத்து......நம்பர் அருளும்
பெற்றார் - என்றதனால் அன்பர்களை ஊட்டிய அச்செயலாலே
அவர்களருளோடு அரனருளும் பெற்றார் என்பதாயிற்று. "படமாடக் கோயிற்
பகவற்க தாமே" என்றபடி அன்பர்களுக்குள்ளே நின்று மகிழ்ந்து அரன்
உண்டு அருள்கின்றான் என்பது உண்மை. இக்கருத்துப்பற்றியே "உள்ளத்திற்
றெளிகின்ற வன்பின் மெய்ம்மையுருவினையு மவ்வன்பினுள்ளே மன்னும்,
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண் விமலரையு முடன்கண்ட
விருப்பம் பொங்கி" (திருஞான - புரா - 1023) என்று கண்ணப்ப நாயனாரைத்
துதித்தது காண்க. பசுவின் வாயிலே ஊட்டிய புல் உணவு இரத்தமாக மாறி
அதன் உடல் முழுதும் பரவிப் பின்னர்ப் பாலாக உருக்கொண்டு
முலைக்காம்பில் வெளிவருவதுபோல அடியார்களுக்கு ஊட்டிய அமுது
அருளாக உருப்பட்டுச் சிவலிங்கத்திற் போந்து வெளிப்படும் என்பது
ஞானசாத்திர முடிபு.
|