பக்கம் எண் :


அரிவாட்டாயநாயனார்புராணம்1171

 
910. மேவு செல்வங் களிறுண் விளங்கனி
யாவ தாகி யழியவு மன்பினால்
பாவை பாகர்க்கு முன்பு பயின்றவத்
தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார்.
8

    (இ-ள்.) வெளிப்படை. பொருந்து செல்வங்கள் வேழமுண்ட
விளங்கனியின் தன்மையே பெற்று அழியவும், பார்வதி பாகனாருக்கு
அன்பினால் முன் செய்து பழகிய, அந்தக் குற்றமற்ற திருத்தொண்டினைத்
தாயனார் தவிர்ந்தாரல்லர்.

     (வி-ரை.) மேவு - வழி வழியாக வந்து பொருந்தும்.

     களிறு உண் விளங்கனி - களிறு - யானை. வேழம் - இங்கு
விளங்கனிக்கு வரும் யானை நோய் என்ற பொருள் குறித்தது.
விளங்கனியைக் களிறு உண்ணுதலாவது இந்நோய் பற்றிய அதனால்
விளங்கனி மேற்பார்வையில் முழுக்கனியாகக் காணப்படினும் உள்ளீ டறுதல்.
"வேழம் - வெள்ளிலுக்கு (விளங்கனிக்கு) வருவதோர் நோய்" ... "தேரை
போயிற்றென்றாற் போல்வதோர் நோய் என்க. இனி, யானையுண்டது
வேறுவிதமென் றுரைப்ப" - (சீவகசிந்தாமணி 232 நச்சினார்க்கினியருரை).
"வெதும்பி வேழ, முண்டிடு கனியா மென்ன வுணர்வுபோயுருகா நின்றார்" -
(தட்ச காண்டம் - கந்தபுரா - ததீசியுத் - பட - 40)

     (விளங்கனி) ஆவது ஆகி அழியவும் - (விளங்கனிபோல) வெளிப்
பார்வைக்கு ஆவது - உள்ளது - போலத்தோன்றி என்க. அழியவும் -
உள்ளே ஒன்றுமில்லாத படியால் அழிந்து போகவும். இங்குச் செல்வம்
அழிதல் என்றது அது மாறி மறைந்து போதல் குறித்தது.

     அன்பினால் - முதனிலைத் தீபமாகக்கொண்டு, அன்பினாற் பயின்ற
எனவும், அன்பினாற் றவிர்ந்திலர் எனவும் கூட்டி உரைக்க நின்றது.

     முன்பு - செல்வத்தோடிருந்த முன் காலமெல்லாம், பயிலுதல் -
தவிராது செய்தல்.

     தாவில் செய்கை - பொருட் குற்றம், செயற்குற்றம், மனக்குற்றம்
முதலிய எக்குற்றமும் இல்லாது விதிப்படி செய்துமுடித்த திருத்தொண்டு.
செய்கை - முற்றிய செயல் குறித்தது. முன்பாட்டில் "சிந்தை நீங்காச் செயல்"
என்றதும், "நீ புரிந்த செய்கை" (923) என்பதும் காண்க.

     தாயனார் தவிர்ந்திலர் என்க. தவிராது செய்து வருவதில்
அவருக்கிருந்த தீவிரங் குறிக்கப் பயனிலையை முன் வைத்தோதினார்.
தாயனார் இஃது குறிப்பினால் தாய் இல்லாராகிய இறைவர்க்குத் தாய் போல
அன்புடன் அவரை ஒரு நாளுந் தவிராது நியதியாய்ப் பரிந்து ஊட்டினார்
என்றுரைக்கவும் நின்றது.

     பாவை பங்கர்க்கு - என்பதும் பாடம். 8

911. அல்ல னல்குர வாயிடக் கூலிக்கு
நெல்ல றுத்துமெய்ந் நீடிய வன்பினால்
நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்
கொல்லை யின்னமு தாக்கொண் டொழுகுவார்,
9
912. சாலி நேடி யறுத்தவை தாம்பெறுங்
கூலி யெல்லாந் திருவமு தாக்கொண்டு
நீல நெல்லரி கூலிகொண் டுண்ணுநாள்
மால யற்கரி யாரது மாற்றுவார்,
10
                    வேறு
913. நண்ணிய வயல்க ளெல்லாம் நாடொறு முன்னங் காண
வண்ணவார் கதிர்ச்செஞ் சாலி யாக்கிட, மகிழ்ந்து சிந்தை
யண்ணலா ரறுத்த கூலி கொண் "டிஃ தடியேன் செய்த
புண்ணிய" மென்று, போத வமுதுசெய் விப்பா ரானார்.
11