பக்கம் எண் :


1586 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     1241. (வி-ரை.) மீள மீள ஆட்ட - நவகும்பங்களையும் மேன் மேல்
ஆட்டியதனால் மீள மீள என்று அடுக்கிக் கூறினார்.

     ஆள உடையார் - ஆள்வதற்கு - அடிமைகொள்வதற்கு -
உரிமையுடையவர். ஆள உரியார் என்று பாடங் கொள்வாருமுண்டு.

     ஆளஉடையார் - பூசை - கொள்கின்றார் என்க.

     அன்பின்பாலுளதாய் முள அமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று
முற்ற
- "நயப்புற்றாட்டுதலும்" (1252) என்பதும், "பூசனையை விரும்பும்
வேட்கை (1236) என்றதும் காண்க. நயப்பாடு - ஆசை. அமர்ந்த -
விரும்பிய. முள - மேன்மேற்பெருக. நயப்பாடு முதிர்ந்தபற்று - ஆசை
மிகுந்ததனாற் பற்றாகி விளைந்தது.

     முற்ற - விளைய. அன்பின்பால் உளதாய் - அன்புகாரணமாக
உளதாகிய; அன்பினையே இருக்கையாகக் கொண்டதாகிய. பூசை
வேட்கையானது அன்பினால் உளதாகியது; அது முதிர்ந்த பற்றாக
விளைந்தது. முற்ற - முற்றியதனால். காரணப்பொருட்டில் வந்த வினை
யெச்சம். முற்றியபடியால் - கொள்கின்றார் என்றபடியாம். அன்பின்பால்
- அன்பின் குறிப்பினால் கொண்ட பசுப்பாலினிடத்து என்றுரைக்கவும்
நின்றது.

     முள அமர்ந்த நயப்பாடு - "பொங்குமன்பால்" (1237); "மண்டுகாதல்"
(1254).

     சூழ்கோளம் அதனில் உள் நிறைந்து - கோளம் - இங்கு
மணலாலாகிய சிவலிங்கத்தைக் குறித்தது. கோளம் - வட்டவடிவமாகிய
பொருளைக்குறிக்கும் பெயர். இங்கு அவ்வாறமைந்த சிவலிங்கங் குறித்து
நின்றது. சூழ் கோளம் - சூழ்தல் - கருதுதல். விசாரசருமனார்
கருதியமைத்துக் குறித்த சிவக்குறி.

     உண்ணிறைந்து - மணலிலிங்கத் திருமேனியினுள்ளே நிறைந்து.
எங்கும் நிறைந்த இறைவராயினும், இங்குவிளக்கமாக நிறைந்தனர்.
பசுவினிடத்துப் பால் உடல் முழுதும் நிறைவுடையதாயினும் மடியின்
முலைக்காம்பில் விளக்கமாக நிறைவதுபோல என்க. அரிவாட்டாய 
நாயனாருடைய நியதி வழுவாது "படிமிசைக் கமரில் வந்து" பூசைகொண்டதும்,
அவ்வாறு வருவன பிறவும் நினைவு கூர்க.

     குறித்த - இது, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருமேனியாகும்
என்ற குறிப்பினாற் பூசித்த. மணல் என்ற குறிப்பு நீங்கச் சிவமென்ற
குறிப்புப்பெற மன நேர்பட்ட என்றபடி. "அண்ணல் பாதங், கொண்டவன்
குறிப்பினாலே கூப்பினான் தாப ரத்தை" (ஆப்பாடி - 4) என்ற
திருநேரிசையின் கருத்தினை ஓர்க. குறித்த பூசை - சிவத்தினிற் குறிவைத்த
பூசை.

     கொள்கின்றார் - ஏற்றுக் கொள்வாராகவே ஆள உடையார்
கொள்கின்றாராதலின், அது கண்டு வணங்கி, ஆட் செய்வாராகிய
பிள்ளையார் மகிழ்கின்றார் என்று மேல்வரும் பாட்டில் முடிவது காண்க.

     கொளநின்றார் - என்தும் பாடம். 36

     1242. (வி-ரை.) பெருமை பிறங்கும் சேய்ஞலூர் என்றும்,
பிறங்கும் பிள்ளையார்
என்றுங் கூட்டி உரைக்கநின்றது. பெருமையினாற்
பிறங்குதல். பெருமையானது இங்குச் சார்ந்ததனாற் பிறங்குதற் கிடமாகிய
என்றுரைத்தலுமாம். பிறங்குதல் - விளங்குதல். பிள்ளையார் - "ஆளுடைய
பிள்ளையார்" என்பது போல உலகத்தந்தையாகிய சிவபெருமான் "உனக்கு
நாம் தாதை" (1259) என்றருளி மகனாகக் கொள்ள வருவாராதலின் இவ்வாறு
கூறினார். சேய்ஞலூரில் வந்தவதரித்த பிள்ளையார் என்றலுமாம்.

     தம் உள்ளத்தில் ஒருமை நினைவால் - "ஒன்றியிருந்து நினை
மின்கள்" என்பது திருவிருத்தம். ஒருமை நினைவாவது பூசிக்கும் தாமும்,
பூசிக்கப்படும் சிவபெருமானும் வேறாகக் காணமுடியாது நினைவினில்
ஒற்றித்து நிகழ்தல். இதனையே இலயம் என்பது வடவர் வழக்கு. "ஒன்று
முள்ளத் துண்மையினால்" (1252) என்பதும்,