பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்9

     (இ-ள்.) அந்தணர் தங்கிடைகள்........ஒலி - மறைச்சிறு மாணவர்களின் கூட்டம் அருமறைகளை ஓதிவந்த முறையிலே சொல்லுகின்ற ஒலியும்; வளர்......புறம் சூழ - வளர்கின்ற கமுகுகளின் செழும் சோலைகளும் புறத்திற் சூழாநிற்ப; ஒப்பில் நகர் ஓங்குதலால் - ஒப்பில்லாத அந்த நகரம் மேலே ஓங்குதலினால்; அப்பதிதான் - அந்தக் கழுமலம் என்னும் தலமானது; உகக்கடை நாளன்றியே.....இசைந்துளது - ஊழிக் காலத்தில் மிதப்பது மட்டுமேயன்றி எக்காலத்திலும் கடல் மீதிலே மிதப்பதாகும் என்னும்படி தோற்றத்தைப் பொருந்தியுள்ளது.
     (வி-ரை.) அந்தணர்தம் கிடை - வேத மோதும் மறைச் சிறுவர் கூட்டம். "ஓது கிடை" (1208).
     மறை முறையே செப்பும் ஒலி - வேதங்களை ஆசான் பயிற்றும் பதம், கிரமம், சடை, கனம் என்று சொல்லப்படும் முறைகளின்படி பின்பற்றிச் சொல்கின்றதனால் எழும் ஒலி. வேதச் சத்தமாதலின் ஒலி எனப்பட்டது. இது ஊழிக் கடல் ஒலிக்கு உவமிக்கப்பட்டது பெருஞ்சத்தக் கூட்டமாதல் என்னும் ஒரு புடை ஒப்பாகிய பொதுத் தன்மைபற்றி என்க.
     பூகச் செழுஞ் சோலை - பூகம் - கமுகு. கமுகுச் சோலைகள் மிக்க பசுமைநிறம் காட்டுதலால் கருநீல நிறங் காட்டும் கடனிறத்துக்கு ஒரு புடை ஒப்பாயிற்று. மறை முழக்கமும் சோலைப் பசுமையும் கடல் ஓசையினையும் கடனிறத்தினையும் காட்டுதலால் அந்நகர் கடல்மேல் மிதப்பது போன்றது என்க.
     உகக் கடைநாள் - ஊழியின் நீர் வெள்ளப் பெருக்கு. நீர்ப் பிரளய மென்பர். கடைநாள் என்றார் ஊழியில் நீரினுள் உலக மழிந்துபடுதலின். உகம் - ஊழி. ஊழியிற் பெருவெள்ளத்தில் உலகமெல்லாம் அழிகின்றபோது தான் அழிந்துபடாது தோணியாய் மிதப்பதனால் இது தோணிபுரம் எனப்படும்.
     கடைநாள் அன்றியே எப்பொழுதும் கடல்மேலே மிதப்பதென - ஊழியில் மிதப்பதுவே யன்றி எந்நாளும் மிதப்பதென்னும்படி தோற்றம் கொண்டு. இது தல சரிதக் கண்கொண்டு ஆசிரியர் காணும் தெய்வக் காட்சி.
     கடல் மேலே - ஒலியும் சோலையும் மேலே கிளம்பித் தோற்றப்படுவதனால் மேலே என்றார். ஓங்குதலால் என்ற கருத்துமிது.
     அந்தணர்தம் கிடை முறையே செப்பும் ஒலி - மேல் இந்நகரில் வந்தவதரித்து மறை முறையினைத் தமிழில் விரிக்கும் மறைப் பிள்ளையாரது குறிப்பும், மறையே திருத்தோணியாம் என்ற வரலாற்றுக் குறிப்பும் பட நின்றது.
     இசைந்துளது - இசைதல் - ஒத்திருத்தல்.
3
1902.அரியயனே முதலாமர ரடங்கவெழும் வெள்ளங்கள்
விரிசுடர்மா மணிப்பதண மீதெறிந்த திரைவரைகள்
புரிசைமுதற் புறஞ்சூழ்வ பொங்கோதங் கடைநாளில்
வரியரவ மாந்தரஞ்சூழ் வடம்போல வயங்குமால்.
4
     (இ-ள்.) அரி அயனே.....வெள்ளங்கள் - திருமாலும் பிரமனும் முதலாகிய தேவர்கள் அடங்கும்படி மேலே எழுகின்ற பல நீர்ப் பெருக்குக்கள்; விரிசுடர்....வரைகள் - விரிந்து ஒளி வீசும் பெருமணிக ளழுத்திய மேடைகளின்மீது வீசிய அலைகளால் உண்டாகிய கீற்றுக்கள்; புரிசை.......சூழ்வ - புறமதிலின் புறத்தில் வரிசை பெறச் சூழ்ந்திருப்பன; பொங்கு ஓதம்......வயங்கும் - பொங்கும் பாற்கடலைக் கடைந்த காலத்தில் மந்தர மலையை வரிவரியாகச் சுற்றிய வாசுகி என்ற பாம்பாகிய வடம்போல விளங்கும்.