பக்கம் எண் :

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1493

விளக்குவன இறைவர் தம் கையில் வீணையினையும், அவர் தேவியாகிய விட்டுணு குழலினையும் கொண்டவரலாறுகள். "எம்மிறை நல்வீணை வாசிக்குமே"; "அரியலாற் றேவியில்லை யையனை யாற னார்க்கே"; "ஆயன்வாய்த் தீங்குழலும்" (11 - திருமுறை - கபிலர் - சிவபெருமான் திருவந்தாதி - 28).
இப்பாட்டினால் எழுச்சியில் எழுந்த ஒலி வகைகளும் மேல் அணிவகைகளும் கூறப்படுவன. அதன்மேல் வரும் பாட்டினால் (3100) வைதிகநிலை ஒழுக்கத்தினர்களாயும், அதன்மேல் வரும் பாட்டினால் (3101) ஆகமநிலை ஒழுக்கத்தினர்களாயும் உடன் சென்றவர்களும், அதன்மேல் தேவச்சாதியார்களும் கூறப்படும் முறையில் இவை தொடர்ந்து வருதல் கண்டுகொள்க. இவற்றுள்(3098 - 3101) முதனான்கு பாட்டுக்கள் மண்ணுலகில் நிலத்தின்கண் நிகழ்ச்சிகளும், ஐந்தாவ்தில் விண்ணவரது வானில் நிகழ்ச்சிகளும் கூறப்படுவதும் காண்க.
(நிலத்தில்) ஆக (3098), விழுங்க, படைப்ப, நண்ண(3099) - மல்க (3100) - ஏக (3101) - (வானில்) சென்றார் (3102) என்று இவ்வைந்து பாட்டுக்களையும் தொடர்புபடுத்திக்கொள்க.

1200

3099. (வி-ரை.) விழுங்குதல் - மறைத்தல்; பதாகை - கொடி; வெள்ளம் - மிகுதி; விண்ணினை விழுங்குதல் - ஆகாயவெளியை மறைக்கும்படி மிகுந்து செறிதல்; வெண்துகிற் கொடி - வெள்ளைத் துணைகளாலான கொடிகள். வெள்ளைக் கொடிகள் இந்நாளிலும் போர் முகத்துச் சமாதானக் குறிகளாக வழங்குதல் காண்க.
வெண்மை - சாந்தம், உண்மை முதலிய சத்துவ குணங்களின் அறிகுறி. வெள்ளம் - விழுங்க என்று கூட்டுக.
கவரிக்கானம் - கவரி - சாமரைகள்; கானம் - காடுபோல்வதனைக் காடு என்றதுபசாரம். கதிர்விரிதலாவது கவரிகள் வீசுந்தோறும் ஒளி விரிந்து காட்டுதல்.
கண்வெறி படைத்தல் - அசைவினாலும் விரியும் சுழலலினாலும் பார்ப்போர் கண்கள் சுழன்று மயக்கமடைதல். கானம் - வெறிபடைப்ப என்று கூட்டுக.
மண்ணிய மணிப்பூண் - மணிகளை மண்ணுதல் - கடைதல் விளக்குதல் முதலிய செயல்களால் மணிகளை ஒளிமிகச் செய்தல்; "மாமணிச் சோதியான் - உறவு கோனட் டுணர்வு கயிற்றினான், முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே" (தேவா).
பூணும் - தூசின் பொதிப்பரப்பு நண்ண என்க. எண் உம்மைகள் விரிக்க. மணத்தின் எழுச்சியில் ஆடையாபரணங்கள் மிகவும் கொண்டு செல்லும் வழக்குக் குறித்தது.
அரிசனம்...தூசின்பொதி - அரிசனம் - மஞ்சள்; அரிசனம் மலிந்த பொற்பின் - தூசு - மஞ்சல் தோய்த்த துணிகளும் மஞ்சட்பட்டு வகைகளும். மஞ்சல் நிறம் - சுபக்குறி காட்டுதற் கெடுத்தது.
எண்ணிலா வண்ணம் - மஞ்சல் முதன்மையாகப் பல வன்னங்களும் கலந்த அழகு. தூசின் பொதிப்பரப்பு - துணி மூட்டைகளின் மிகுதி.

1201

3100. (வி-ரை.) சிகையொடு....ஆசானும் - வேதமோதும் சிறுவரும் அவர்களை ஓதுவிக்கும் ஆசானும் கூடி ஒரு தொகுதியாக; கிடை - ஒது கிடை; மறை பயிலிடத்திற்றங்கிக் கிடத்தலின் கிடை எனப்படும். இங்குக் கிடை அவ்வாறு தங்கிக்கிடந்து பயிலும் மாணவர் கூட்டத்துக்கு வந்தது; "ஓது கிடைசூழ் சிறுவர்களும் முதவும் பெருமை யாசானும்" (1208).