| இருள்போய் மாய்தலாவது - ஒளியின் முன் வலியிழந்து மறைந்து நிற்றல்; மாயாத இருள் (ஆணவமலம்) போலன்றி இது மாயும் இருள் என்றதாம்; |
| ஆன - ஆயின; ஆக்கமாவது திருவருள் வலிமையினால் அத்தன்மைத்தாதல்; "என் உளமே புகுந்த வதனால்" "திரு வால வாயர னிற்கவே"; "வாது செயத் திருவுள்ளமே" "வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே" என்பனவாதி திருவாக்குக்களும் வரலாறுகளும் காண்க; |
| பெருகு...ஞானமணி விளக்கு - ஒவ்வோர் அண்டப் பகுதிகளிலும் ஒவ்வோர் இரவி - மதி - முதலாகிய ஒளிகள் புற இருளை நீக்க அமைந்து நிற்கவும், சிவனது சித்தாகிய ஞான வொளியொன்றே எல்லா அண்டங்களினும் பரந்து அகவிருள் துரந்து பொய்ந்நீக்கி மெய்யினைப் புலப்படுத்துவதாகலான் அண்ட மெலாங் கொண்டது என்றும், ஒரு என்றும், ஞான விளக்கு என்றும் கூறினார்; மணி விளக்கு என்றது அந்தச் சில சித்தாகிய ஞானம் கட் புலப்படாது நிறைந்து விளங்கவும், பிள்ளையாராகிய இந்த ஞானவிளக்குக் கட்புலப்டுவதாய் எழுதல் வருதல் முதலிய செயல்களுக்கிலக்காய் மனங் கவரும் அழகு பொருந்த வெளிப்படுதல் குறித்தது. |
| பெருகுஒளி - மேலும் மேலும் பெருகும் ஒளி; |
| நலம் படைப்ப - முன்னர்ப் பொலிவெய்த (2548) என்றும், கவின் காட்ட (2549) என்றும் கூறிய ஆசிரியர் இங்கு நலம் படைப்ப என்றார், முன் கூறிய பாவம் இரிதலும் மாசு கழுவுதலும் சாதன நெறிகளின் பின் முதலில் வரும் பயன்களாகவும், இருள் போய் ஞானம் வருதல் முடிந்த பயனாகவும் உள்ள நிலை குறிக்க; இருணீக்கமும் ஞான விளக்கமுமே உடனிகழ்வனவாய் நிறைந்த பெருநலமாதல் காண்க. |
| 652 |
| 2551. (வி-ரை) புரசை...பூழியர் - இதுவரை தாழ்வு பொருந்திய அரசு இனி வெற்றிபெற்றுயரவுள்ள நிலையின் குறிப்பு. |
| வண்தமிழ் - தமிழ் இகபரமாகிய எல்லாப் பயன்களும் தரும் குறிப்பு. |
| தரைசெய் தவப் பயன் - தரை - தரையில் உள்ளோர் - பாண்டி நாட்டார்; அந்நிலமகள் செய்த தவங் காரணமாக அதில் பிள்ளையார் எழுந்தருளித் தீண்டப் பெற்றது என்ற குறிப்புமாம்; "தருமேவு மலைமகளுஞ் சலமகளு மறியாமற், றிருமேனி முழுதுநில மகடீண்டித் திளைப்பெய்த" (திருவிளை-மண்சும-பட-28); பயன் விளங்க - முன்னம் ஒடுங்கி யிருந்த பயன் இப்போது வெளிப்பட்டு விளக்கமடைய; |
| விளங்கச் சைவநெறி தழைத்தோங்க - விளங்கும்படி சைவம் தழைத்து ஓங்க என்றது சைவ நெறியினின்று தழைத்தலே தரையின் பயன் என்றபடி; |
| விளங்க - ஓங்க - வந்தான் - என்று பணிமாற எனக் கூட்டி உரைக்க. |
| உரை செய்திருப்பேர் பலவும் ஊதும் - வாயினால் சொல்லத் தக்க பிள்ளையாரது திருப்பெயர்கள் பலவற்றையும் எடுத்து உரத்த ஒலியால் ஊதி உலகுக்கு அறிவிக்கும்; உரை செய் - உரைக்கத் தக்க; பிள்ளையாரது திருப்பெயர்களே மக்கள் வாயார உரைசெய்து உய்யத் தருவன என்பது; "ஞானசம் பந்த ரென்னு நாமமந் திரமுஞ் சொல்ல"(2619); |
| மணிச்சின்ன மெலாம் - சிவனருளிய முத்துக்களாலாகிய காளம், தாரை சின்னம் என்ற எல்லாம்; மணி - முத்தினைக் குறித்தது. |
| சின்னம் - பொதுப் பெயராய் வந்தது; ஊதும் - இவை பேர் பலவும் ஊதுகின்ற வகைகளை 2119-2120-2121 பாட்டுக்களிற் காண்க. |
| பணிமாறுதல் - ஊதுதல்; சின்னங்கள் ஒலிசெய்தற்கு வழங்கும் மரபு வழக்கு; |