பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்373

  "நீ இயைந்த வருத்தம் யாது?" என்று (இறைவர்) கேட்டருள; தொழும்...விளம்புவார் - தொழுகின்ற தமது குறையினை எடுத்துச் சொல்லுவாராய் (நம்பிகள்); யானே...உமக்கென்று - "நானே தொடங்கிக் கொண்ட குற்றத்தி னுட்பட்டு வருந்துகின்ற என்னை அக்குற்றத்தினின்றும் இன்னமும் மேலெடுத்து ஆட்கொண்டருள வேண்டுவது உமக்குக் கடமை" என்று கூறி,
 

326

  3481. (இ-ள்) அடியேன்....திறமெல்லாம் அங்குத் திருவொற்றியூரிலே தேவரீரே அருள்புரிய, வடித்த வேல் போன்ற ஒள்ளிய கண்களையுடைய சங்கிலியாரை அடியேன் மணஞ் செய்து அணைந்த தன்மைகளை எல்லாம்; கொடியேர்.....துணிந்திருந்தாள் - கொடி போன்ற அழகிய இடையினையுடைய பரவையார் தானே அறிந்துகொண்டு தன்னிடம் நான் வந்தால் உயிர் விடுவேன் என்று துணிந்திருந்தாள்; என்.....மொழிந்து - ஆதலால் நான் செய்வது யாது என்று கூறி,
 

327

  3482. (இ-ள்) நாயனீரே...தம்பிரானாரே யாகில் - எனது தலைவரே! நான் இங்குத் தேவரீருக்கு அடியேனேயானால், தேவரீர் எனக்குத் தாயினும் நல்ல தோழருமாகும் பெருமானாரே யானால்; ஆய...தாரும் என - ஆகிய அறிவும் இழந்து மனமுடைவேனுடைய வருத்தத்தைக் கண்டு பரவையின் மாளிகையளவும் போய் இவ்விரவிலேயே அவள்பால் அதிகரித்துப் பொருந்திய புலவியைத் தீர்த்தளிக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க,
 

328

  3483. (இ-ள்) அன்பு.....வேண்டி - அன்பு ஒன்றினையே விரும்பிய தமது ஆன்ம நாயகர் தம் அடியாராகிய நம்பிகள் யாது விரும்பினாரோ அதனையே தாமும் அருள விரும்பினாராகி; முன்பு...நோக்கி - தமது திருமுன்பு நின்று விண்ணப்பஞ் செய்த நம்பிகளது முகத்தினை நோக்கி; துன்பம்ஒழிநீ.......அருள் செய்தார் - நீ உன் துன்பத்தினை நீக்கக் கடவாய்; நாம் உனக்காக ஓர்தூதனாகி இப்பொழுதே பொன்னாலும் மணியாலும் புனைந்த அணிகளைப் பூண்ட பரவையிடம் செல்கின்றோம் என்று அருளிச் செய்தனர்.
 

329

  இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3480. (வி-ரை) நீ உற்றது என்? - என்க.
  உற்றது - உற்ற துன்பம்; வருத்தம் என்றது நம்பிகளின் உள்ளுணர்வு நிறைந்த பெருமானாதலின் அறிய நின்றது; ஆயின் மேல் வினவ நின்றதென்னை? எனின், உலக நிலையியலின் பொருட்டென்க: மேல்வரும் நிகழ்ச்சிகள் யாவும் இவ்வாறே உய்த்துணர்ந்து கொள்ளத்தக்கன.
  யானே தொடங்கும் துரிசிடைப்பட்டு அழுந்தும் என்னை - துரிசு - குற்றம்; யானே தொடங்கும் - நானே மேற்கொண்டு செய்துகொண்ட செயலின்பயனாக; சங்கிலியார்பாற் கொண்ட காதலும் செய்த சபதமும் அதனைத் தவறியதும் முதலியவற்றின் விளைவாக; இன்னம் - முன்னர் ஆட்கொண்டமைபோல மேலும்; "தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி" (நம்பி. தேவா).
  உமக்கு - உமக்குக் கடன்; கடமை என்பது இசை யெச்சம்.
  (நம்பி) என்று (3480) - என மொழிந்து (3481) - என (3482) - விண்ணப்பம் செய்த நம்பி முகநோக்கித் - தம்பெருமான் - அருள் செய்தார் (3483) என்று இந்நான்கு பாட்டுக்களையும் கூட்டி முடிக்க.
  தொடக்குத்துரிசு - என்பதும் பாடம்.
 

326