| |
| இந்நாளிலும் கோட்டைமதில்களிலும் வாயில்களிலும் பலவகை இயந்திரங்கள் வைக்கப்படுதல் காண்க. ஞாயில் - மதிலுறுப்பு. இஞ்சி - மதில்: சூழ்வன - சூழல் - சூழ்ச்சியுடன் எண்ணி அமைக்கப்படுதலும் குறிப்பு. |
| மாடம் மஞ்சு சூழ்வன - என்பது மாடங்களின் உயர்ச்சி குறித்தது. |
| காளையர்குஞ்சியின் பரப்பு நயனியர்களது அடிச்செம்பஞ்சு சூழ்தல் - தலைவியர்ஊடிய வழி, ஊடல் தீர்த்தற் பொருட்டுக் காளையர் அவர்கள் அடியில் பொருந்த வீழ்தலா லாவது. ஊடலில் இவ்வாறு நிகழ்தலும் மரபென்பர். நஞ்சு சூழ்வன - என்றது பெருங் கோபக் குறிப்பு. நஞ்சு - விடத்தன்மை குறித்தது. |
| நயனியர் - கண்ணோக்கினாலே காமநோய் புலப்படுப்பாரென்பது குறிப்பு : "ஒருநோக்கு நோய் நோக்கு" (குறள்) "செருவெழுந் தனுவ தொன்றும்" (2995) என்று இதன் தன்மையினைக் குறித்தல் காண்க. |
| காளையர் - என்றதனால் இத்தன்மையின் நிகழும் ஆண்மக்களின் பருவமுணர்த்தியபடி. |
| குஞ்சியின் பரப்பு - ஆண்மக்களின் பரந்து நீண்ட தலைமயிரின் தன்மை குறித்தபடி. குஞ்சி - இங்கு ஆண்மக்களின் தலைமயிர் குறித்தது. |
| குஞ்சி ஞாயில் - என்றதனால், நாடு நகரச் சிறப்பும், மாடம் - என்றதனால் நகர வளமும், நயனியர் - காளையர் என்றதனால் மகிழ்ச்சியுடைய மக்களின் வளமும் கூறப்பட்டன. இதனையே மேல்வரும் பாட்டில் தொடர்ந்து சொல்லுதல் காண்க. |
| சூழ்வன - என்பன இப்பாட்டில் சொற்பின்வருநிலை. இவை பல பொருளாக மதிப்பிட வரும் நிலை ஆசிரியரது கவி நலச் சிறப்பு. 553 முதலியவை பார்க்க. |
| 2 |
3157 | விழவ றாதன விளங்கொளி மணிநெடு வீதி; முழவ றாதன மொய்குழ லியர்நட வரங்கம்; மழவ றாதன மங்கலம் பொலிமணி முன்றில்; உழவ றாதநல் வளத்தன வோங்கிருங் குடிகள். | |
| 3 |
| (இ-ள்.) விழவு......வீதி - விளக்கமுடைய அழகிய வீதிகள் விழாக்களை நீங்காதிருந்தன; முழவு....அரங்கம் - அடர்ந்த கூந்தலையுடைய பெண்களின் ஆடரங்கங்கள் முழா முழக்கத்தினை நீங்காதிருந்தன; மழவு.....முன்றில் - மங்கலம் பொலிகின்ற அழகிய முற்றங்கள் சிறார்களை நீங்காதிருந்தன; உழவு....குடிகள் - செழிப்புடைய பெருங்குடிகள் உழவுத்தொழிலின் நீங்காதநல்ல வளப்பங்களைக் கொண்டிருந்தன. |
| (வி-ரை.) அறாதன - சொற்பொருட் பின்வருநிலை; நீங்காதிருக்கும் நிலை குறித்தன. |
| வீதி, அரங்கம், மூன்றில், குடிகள் - இந்நான்கு எழுவாய்களும் பின் வந்தன. முறையே நீங்காது அவை கொண்டு விளங்கும் விழவு முதலியவற்றின் சிறப்பினை முன்னுணர்த்தற்கு. |
| முழவறாதன அரங்கம் - இவை தெருவுதொறும் உள்ள நாடக மேடைகள். "கவினார்வீதித், தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே" (6) "வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர" (மேற்படி 1); முழவு - மத்தளவோசை. |
| மணிமுன்றில் - மனைகளின் முற்றங்கள். முழவறாதன மூன்றில் - என்றது சிறார்கள் மனை முற்றங்களில் விளையாடும் தன்மை குறித்தது. |