பக்கம் எண் :

 

தலவிசேடமும் - சரிதக்குறிப்புக்களும்

  திருப் பெருமங்கலம் - வன்றொண்டர் கோயில்: இது திருப்புன்கூரினை அடுத்து வடக்கே ? நாழிகையளவில் உள்ளது; இதன் தென்புறம் வன்றொண்டர் கோயில் (விறன்மிண்டர் கோயில் என்று தவறாக வழங்கப்படுவது) உள்ளது. இது ஒரு சிறு கோயில்; ஆயினும் சுவாமி, அம்மை, விநாயக சுப்பிரமணியர், சண்டீசர், நந்திதேவருடன் பூரண சிவாலயமாக உள்ளது. செங்கற் கட்டிடம். இதில் சுவாமியின் பின்புறம் நின்று வழிபடும் கோலத்துடன் வன்றொண்டர் (ஆளுடைய நம்பிகள்) திருவுருவம் உள்ளது; ஏயர்கோன் கலிக்காம நாயனாரது உற்சவ மூர்த்தித் திருவுருவமும் உள்ளது. அடுத்து உள்ள தென்புறம் கோட்டையும் கிராம நத்தமும் கொண்ட கிராமம் இருந்ததாகவும், மேட்டில் பெரிய பழைய சிவாலயமாய் இது இருந்ததாகவும், அது கிலமாய்ப் போனபின் இங்குக் கொண்டு வந்து அமைக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. ஆளுடைய நம்பிகள் இங்கு வந்து தங்கியிருந்து கலிக்காமனாருக்குத் தாம் சூலை தீர்க்கவரும் திறம் செப்பிவிட்ட இடம் இது என்றும், இதனை அந்நினைவின் பொருட்டுக் கலிக்காமனார் பின்னாளில் சிவாலயமாக வகுத்தனர் என்றும் கருதப்படுகின்றது. சீகாழியில் திருஞான சம்பந்தர் கோயிலில் சிவலிங்கத்தின் பின்புறம் நின்று வழிபடும் கோலமாக அமைந்திருக்கும் நிலை ஈண்டு நினைவு கூர்தற்பாலது. இக்கோயிலை விறன்மிண்டர், நம்பிகள்பால் சினம் கொண்டு வந்து தங்கிய இடம் என்று தவறாக உணர்ந்துகொண்டு அதற்காகத் திருப்புன்கூர்ப் புராணத்துள் விறன்மிண்ட நாயனார் பூசித்த படலம் என்று ஒரு படலமும் வகுத்துக் கட்டிவிட்டார்கள். விறம்மிண்டருக்கும் இத்தலத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இந்த ஐயப்பாட்டினைப் பற்றித் தாம் பலரிடம் விசாரித்தாகவும், சில ஆண்டுகளின் முன் மிகுந்த வயது சென்ற பறைக்குல அடியாரொருவர் இது "வன்றொண்டர் கோயில்". என்று தமக்கு அறிவித்து ஐயத்தை நீக்கினார் என்றும் தருமபுர ஆதீனம் ஸ்ரீமத். மவுன சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் அறிவித்தார்கள். வன்றொன்டர் கோயில் என்பது விறன்மிண்டர்கோயில் என்று வழுவி மருவி வழங்கப்படுகிறது’
  பெருமங்கலம்:- இக்கோயிலுக்கு வடக்கே ? நாழிகையளவில் உள்ளது இப்போதுள்ள திருப்பெருமங்கலம் கிராமம்; அதன் வடபாகத்தில் பழைய கிலமாகிய சிவாலயம் உண்டு. அதன் சிவலிங்க மூர்த்தி பஞ்ச பூதங்களும் நேரே பூசித்து வழிபடவெளியில் வீற்றிருக்கின்றார். அந்தோ! அன்பர்கள் இவருக்கு ஒரு சிறு கட்டிடமாவது அமைத்து வழிபடும் நாளேதோ? கிராமநத்தம் 68 ஏக்கர் பரப்புடைய பெரிய அளவுள்ளது. இப்போது பெரும்பாலும் வீடுகளின்றி நிற்கும் காலியிடமாக உள்ளது; வீடுகள் இதன் வடபுறத்தில்தான் உள்ளன. இந்தப் பரப்பு நத்தத்தில் குளங்கள் பல உண்டு. வீட்டுக் கிணறுகள் பலவும் கிடைக்கின்றன. பழைய வீடுகள் இருந்த அடையாளங்களும் காணப்படுகின்றன. இந்த இடத்தில்தான் கலிக்காமனாரது திருமாளிகை இருந்திருக்கலாமென்று கருதப்படுகின்றது.
  பன்னிரு வேலி:- பன்னிரு வேலி என்பது அந்நாளில் ஒரு குளிப்பிட்ட சிறந்த நிலப்பரப்பாக வழங்கியது போலும்; திருவாரூரில் "அஞ்சணை வேலியாரூர்" (அரசு - தேவா) என்றபடி கோயிலும் குளமும் ஓடையும் முறையே ஐயைந்து வேலிப் பரப்புடையனபோல. "ஏத நன்னில மீரறு வேலி யேயர் கோனுற்ற விரும்பிணி தவிர்த்து" என்றும், "பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளும், செய்கை" என்றும் வரும் ஆளுடைய நம்பிகளது திருவாக்கினால் அறியப்படுகின்றபடி, ஏயர்கோன் கலிக்காம நாயனாரால் தமது பிணி தவிர்த்த அருளுக்காக 12 வேலியும், மழை பெய்ய 12 வேலியும், பெருமழை தவிர்ப்பதற்காக 12 வேலியுமாக நிலங்கள் தானம் செய்யப்பட்டன என்று கருத இடமுண்டு. "பன்னிரு வேலி" என்னும்பெயரால் இப்போதும் வழங்கப்படும் கிராமம்(நிலம்)மழை பெய்வதற்காகவும், பூசலாங்குடி என்னும் 12 வேலி நிலம் மழை தவிர்ப்பதற்காகவும் தானம் செய்யப்பட்டன என்று வழக்கில் தெரிய வருகின்றது. இவை மாயூரம் தாலுக்காவில் திருப்புன்கூருக்கு மேற்கில் 3 நாழிகை யளவில் உள்ளன; "இரும்பிணி தவிர்"க்கக் கொடுத்த 12 வேலி நிலத்தைப்பற்றி ஆராய்ந்து அறியவுள்ளது. இவ்வரலாற்றைப் பிழையாக உணர்ந்து ஒரு இராஜேந்திர சோழன் தனது நாட்டுக்கு மழைபெய்யச் செய்யும்படிக்கும் அங்ங