பக்கம் எண் :

460திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  27. இறைவர் அடியார்க்கருளும் திறங்கள் அளப்பில. அவை மனிதர் ஆராய்ச்சியுட்படா.
  28. இறைவர் பரவையார்பால் நம்பிகளுக்காக ஒரு முறையன்றி இருமுறை தூதுசென்றது நம்பிகள்பால் வெம்புறு வேட்கைகாணும்படி மேற்கொண்ட திருவிளையாட்டின் றிறமும், பரவையாரது தவத்தின்றிறமுமாம்.
  29. ஆண்டவர் திறத்தில் இழிவுபட யார்பாலேனும் சொற் செயல்கள் நிகழக் கண்டால் அவர்பாற் செற்றங்கொள்ளுதல் உறைப்புடைய அன்பின்றிறத்தால் வருவது.
  30. வழிவழி இடையறாது சிவனடிமைத் தன்மையிற் சார்ந்துவரும் வாழ்க்கை ஒருவற்குப் பெருமிதமாக எண்ணத் தகுதியுடைய பொருளாம்.
  31. மாதர்பால் இறைவரை அடியாராகிய நம்பிகள் தூது விட்டமை காதினாலும் கேட்டகத்தகாத பெரும் பிழையாகிய சிவாபராதம் என்று கொண்டனர் ஏயர்கோன் கலிக்காமனார். இது நூல்வழிக் கொண்ட துணிபு.
  32. நம்பிகள் அதனை அன்னதொன்றென்றே ஒப்பிப் பிழை யுடன் பட்டமை அவரது குணத்தின் நேர்மையினையும் பெறற்கரிய பெருந்தன்மையினையும் காட்டும்.
  33. இவ்வாறு உடன்பட்டு ஒப்பிய உண்மையினைக் கடைப்பிடித் தொழுகிய செம்மையாளர் கலிக்காமனார்;அப்படி யிருந்தும் சூலைநோயினை அவர்பால் ஏவி அவரை மிக்க வருத்தத்துக் குள்ளாக்கினர் இறைவர். இது எப்பொருள் எத்தன்மைத்தாயினும் சிவன் உடன்பட் டருளுவதே விதியாம் என்ற மெய்யுணர்வு தலைப்படவாராத குறைவு நோக்கிப்போலும் என்க.
  34. வழிவழி வந்த பழ அடிமை உரிமையிற் பெருமித முற்று, அதனை உயிரினும் சிறந்ததாகக் கொண்டு, நம்பிகளால் சூலை தீர்க்கப் பெறுதலினும் உயிர் துறத்தல் நன்றென்று துணிந்து உயிர் துறந்தனர் கலிக்காமனார். இஃது அன்பின் உறைப்பினால் வந்த உயர்வாகிய இறுமாப்பு.
  35. தமது பிழை யுடன்பட்டுத் தம்மீது செற்றங்கொண்டு வெறுத்த கலிக்காமனாரது நட்புப் பெறுதற்கு வாயில் வேண்டினர் நம்பிகள்; இது சிவனன்பின் நலத்தின் வைத்த நேரிய மனப்பண்பு.
  36. கலிக்காமனார் தேவியார் தமது கணவர் உயிர் துறந்தவுடன் அவருடனே போவது புரிந்து முயன்றனர். இது கற்பின்றிறம். மாதினியார் - திலகவதியார் - செயல்கள் ஈண்டுக் கருதத்தக்கன.
  37. ஆயின் அதுபோழ்து நம்பிகள் தமது திருமனையில் வரவு கேட்டு, அதனைத் தவிர்ந்து ஒருவரு மழுதல்செய்யாது மனையலங்கரித்து அவரை எதிர்கொண்டு உரியபடி உபசரிக்க ஏவினர். முன்னையது கற் பினியலாகிய அறத்தின் பாலதாகிய புண்ணியப் பகுதியாப்ப் பசு தருமமாகும். பின்னையது சிவனடியார் பத்தியின் பாலதாகிய சிவபுண்ணியமாகிய பதிதருமமாகும். இஃது அதனின் உயர்ந்ததாய்ப் பரம்பரியத்தின் வீடுபேறு தரும் தன்மையுடையது. ஈண்டு அம்மையார் இதனை அறிந்தொழுகியதுபோல ஏனைய பெண்மணிகளும் மக்களும் அறிந்தொழுகின் நலமாகும். இஃது அரியதோர் சித்தாந்த உண்மையாகும். காரைக்காலம்மையார் தமது கணவன் தம்மை நீத்த செய்தி தெரிந்தவுடன் ஒழுகிய நிலை ஈண்டு நினைவு கூர்தற்பாலது. (1765)
  38. ஈண்டு அம்மையாரது இல்லற வொழுக்க நிலையும், சிவனடிமைத் தனத்தின் ஒழுக்கநிலையும் மிக உயர்ந்த பண்பில் விளங்குவன. அவையே இச்சரித மேல் நிகழ்ச்