பக்கம் எண் :

478திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  தாம் முயன்ற பவனவழி - தாம் முன் பல காலம் முயன்று கைவரப் பெற்ற பிராணாயாம நிலையின் வழி; பிராகரமியம் என்ற சித்தியினாலே வரும் இந்நிகழ்ச்சி குறிக்கத் தொடக்கத்தில் "அணிமாதி வருஞ்சித்தி பெற்றுடையார்" (3565) என்றதும் காண்க. பவனம் - வாயு; வாயுமூலமாக உயிரைச் செலுத்துதல்; "காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்த" (1715) என்றதும், ஆண்டுரைத் தவையும் பார்க்க.
  பவனவழி - தம் - உயிரை - அவனுடலிற் - பாய்த்தினார் - இஃது ஒரு உடம்பினுள் உயிர் புகும் தன்மை; "மால்கொடுத் தாவி வைத்தார்" (தேவா); இது பரகாயப் பிரவேசம் எனப்படும்; கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்பது; "ஆன்மாக்கள் மாறிப் பிறந்துவரும்" என்ற சிவஞான போதம் இரண்டாஞ் சூத்திரம் மூன்றாம் அதிகரணத்தினுள் இதனையே உதாரணமாக எடுத்துக்காட்டுதல் காண்க. உலகில் ஆன்மாக்கள் பிறந்த வருதல் எல்லாம் இத் தன்மையே என்பது ஞானநூற்றுணிபு. தூலஉடல் விட்ட ஆன்மா "முன்னுடம்பு இறக்குங்கால் அடுத்த வினை காட்டும் கதிநிமித்தம் பற்றி உயிர் அவாவுமாறு மனஞ் செலுத்துதலான் அக்கதிக்கட் சேறற் கேதுவாய் எஞ்சிநின்ற புண்ணிய பாவ சேடத்தாற் சூக்குமதேக மாத்திரையாய்ச் சென்று அம்மனந் தள்ளிய கதிக்கு அமைந்த அக் கருவின்கட்படும்" என்ற உரை காண்க. இதனைப் பஞ்சாக்கினி வித்தை என்று வேதங்களுட் பேசப்படும்.
 
"அரவுதன் றோலுரிவு மக்கனவும் வேறு
பரகாயம் போய்வருமப்
பண்பும் -பரவிற்
குடாகாய வாகாயக் கூத்தாட்டா மென்ப
தடாதுள்ளம் போமாறது"
 

(போதம் - 2 - 3 - வெண்பா.)

  ஆண்டுரைத்தவையும் காண்க.
  இங்கு இடையனது வினைமாள ஆயுள் கழிந்து இறந்த உயிர் தனது கன்மநிலைக் கேற்றவாறு சென்று விட்டது; அவன் உடம்பு ஐம்பூதச் சேர்க்கை நீங்கிப் பிரிவுபடக் கிடந்தது. அதனை யாதொரு கன்மத் தொடர்பும் சம்பந்தமுமின்றிச் சிறிது நேரமட்டில் பசுக்களின் துயர் நீங்குதற்குக் கருவியாக்க யோகியார் எண்ணினார். வேறு சென்மத்திற்கும் இதற்கும் இதுவே இங்குள்ள வேறுபாடு.
  உடலில் உயிரைப் பாய்த்தினார் - மேலிருந்து கீழ்ப்பாயும் இயல்புடைய நீரை ஒரு குடத்தினின்றும் வேறுமோர் குடத்திற்குப் பாய்ச்சுதல் போலக் கீழே நிலத்திடைக் கிடந்த இடைய னுடலில் மேலிருந்த தம் உயிரைச் செலுத்தினார். இடத்தால் மேல் கீழ் என்றது மட்டுமன்றித் தன்மையாலும் அவ்வாறே கொள்ளத்தக்கது.
 

13

3577
பாய்த்தியபின் றிருமூல ராயெழலும் பசுக்களெல்லாம்
நாத்தழும்ப நக்கிமோந் தணைந்துகனைப் பொடுநயந்து
வாய்த்தெழுந்த களிப்பினால் வாலெடுத்துத் துள்ளிப்பின்
நீத்ததுய ரினவாகி நிரந்துபோய் மேய்ந்தனவால்
 

14

  (இ-ள்) பாய்த்தியபின்.....எழலும் - முன்கூறிய அவ்வாறு பாய்த்தியபின்னர்த் திருமூலராகி மேல் எழும்புதலும்; பசுக்களெலாம்....பின் - பசுக்கள் எல்லாம் அவனைக் கண்ட மகிழ்ச்சியுடனே நாத்தழும்பேற அவனுடலினை நக்கியும் மோந்தும் பக்கத்தில் அணைந்தும் கனைப்போடும் விரும்பியும் ஆக இவ்வாறு கொண்டு எழுந்த பெருமகிழ்ச்சியினால் வால்களை மேலே எடுத்துத் தூக்கித் துள்ளிப் பின்னர்; நீத்த.....மேய்ந்தனவால் - துன்ப நீங்கியவையாய் வரிசைபெறச் சென்று மேய்ந்தன.