| மேய்விடத்துப் பின் சென்று - பசுக்கள் மேயும் இடத்தில் பின்செல்லுதல் அங்கங்கும் அவற்றுக்கு ஏதேனும் பயமும் கேடும் வாராது காத்துக் காவல் செய்தற் பொருட்டு. |
| காவிரி முன்றுறைத் தண்ணீர் - காவிரியின் முன்துறையில் ஓடும் தெளிந்த தண்ணீர்; முன்றுறை என்றார் உள்ளே நடுவுட் சென்றால் ஆழமாய் இருத்தலுடன் நீர் வேகமாய் ஓடுதலின் அமைதிபெற அருந்த லாகாமையால் பசுக்கள் தம் இயல்பாகவே கரையோரம் நின்று முன்றுரையிலே நீர் அருந்துவது இயல்பாம். இங்குக் காவிரி என்றது காவிரியினின்றும் பலவாகப் பிரிந்து செல்லும் கிளையாறுகளுள் ஒன்றாகிய வீரசோழனாறு; சாந்தனூருக்கு அருகில் வடக்கில் ஓடுவது. |
| தண்ணீர் கலந்துண்டு - பசுக்கள் புல் மேய்விடத்துப் பல பிரிவாகப் பிரிந்து மேய்வன, புல் அவ்வகை தமக்கு வேண்டுமளவு உணவு தேடிப் பெற்று உண்ணும் பொருட்டு; ஆனால் நீர்த்துறையில் நீருண்ண அனைத்தும் சேர்ந்து சென்று நீர் உண்ணுவது இயல்பு; நல்லநீர் ஒருசேர அனைத்துக்கும் ஓரிடத்திற் பெற உள்ளமையால்; "மானினங்கள் கானிடைநின் றொருவழிச்சென் றேறு துறை ஒளிநின்று" (791). கலந்து - கூடி என்றதாம். இவ்வாறு பசுக்கள் முதலியவை பிரிந்து மேய்வன - கூடி நீருண்பன - பின் நீழலமர்ந்து அசை விடுவன - மாலையில் கன்றுகளை நினைந்து மனையை நோக்கி மெல்ல நடப்பன என்ற இயல்புகள் எல்லாம் அவற்றின் வாழ்க்கைத் திறத்தினையும் அவசியங்களையும் உற்று நோக்கி இயற்கை தெரிந்த பெரும் புலவர்களே உள்ளவா றுரைக்கவல்லவர்; (புலா லுண்ணும் பிராணிகளின் வாழ்க்கை நிலைகள் வேறாதலும் கவனிக்க). |
| புறவின் நிழலின் இனிதாகப் புறங்காத்தார் - புல் உண்டும் நீர் அருந்தியும் பசியும் நீர்வேட்கையும் தீர்ந்த பின்னர், நிழல் உள்ள இடங்களில் பசுக்கள் அனுமதி பெற இருந்து அதைவிட்ட இளைப்பாறும் இயற்கை குறித்தது. இவ்வியற்கைகள் எல்லாவற்றையும் பற்றி முன் சண்டீசர் - ஆனாயர் புராணங்களுள் உரைக்கப்பட்டன காண்க; நண்பகற் கால மாதலின் கதிரவன் வெப்பந் தாக்கா திருக்க நிழல் வேண்டப்படுவது. புறங்காத்தல் - பாதுகாத்தல்; ஒரு ஒரு சொன்னீர்மைத்து. |
| மெய்த்தவர்தாம் - என்பதும் பாடம். |
| 15 |
3579 | வெய்யசுடர்க் கதிரவனு மேம்பாலை மலையணையச் சைவநெறி மெய்யுணர்ந்தோ ரானினங்கள் தாமேமுன் பையநடப் பனகன்றை நினைந்துபடர் வனவாகி வையநிகழ் சாத்தனூர் வந்தெய்தப் பின்போனார். | |
| 16 |
| (இ-ள்) வெய்ய......அணைய - வெப்பமிக்க சுடர்களையுடைய சூரியனும் மேற்கு மலையினைச் சேர; ஆனினங்கள் .....வந்தெய்த - பசுக் கூட்டங்கள் ஒருவரும் செலுத்தாது தாமாகவே முன்னால் மெல்ல நடப்பனவும் தமதுகன்றுகளை நினைந்து செல்வனவுமாகி உலகில் புகழ்பெற்ற விளங்கும் சாத்தனூரில் வந்து சேர; சைவநெறி மெய் உணர்ந்தோர் - சைவ நெறியிலே உண்மை உணர்ந்த யோகியாராகிய திருமூலர்; பின்போனார் - அப்பசுக்கள்சென்ற வழியிலே அவற்றின் பின் போயினர். |
| (வி-ரை) வெய்ய சுடர்க் கதிரவன் - சூரியன். வெயில் வெப்பமாதலின் பசுக்களைப் "புறவினிழலில் இனிதாகப் புறங்காத்தார்" என்று முன் கூறியது காண்க. |