பக்கம் எண் :

490திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  ஆண்டுகள் சென்றால் இவ்வரசு சில நூறாண்டுகள் நின்று பின் கீழே, சாய்ந்து வேரூன்றும்; அப்போது பழையமரமும் வேரும் அற்றுவிடும். இவ்வாறாக இவ்வரசு மேற்கிலிருந்து கோயிலினை வலமாக வந்து இப்போது கிழக்கு வாயிலினுக்கு இருபுறமும் உள்ளதும் அவற்றுள் கீழைவாயிலுக்கு வடக்கிருக்கும் பகுதி கீழ்வீழ்ந்து பலம் அற்றுவருவதும், தெற்கிலிருக்கும் பகுதி வலுப்பட்டு வளர்வதும் காணலாம்.
  தேவிருக்கை - தேவாசனம் என்பது ஒருவகை ஆசனம்; யோகாசனம் என்பர்; தெய்வத்தன்மை வாய்ந்த இருப்பு என்றலுமாம். இப்போது அங்குத் தாபிக்கப்பட்டிருக்கும் திருமூலர் திருவுருவம் காண்க.
  சிவயோகம் தலைநின்று - தம் அறிவினைச் சிவத்தினிடத்திலே ஒன்றுபடப் பதியவைத்தல் சிவயோகம் எனப்படும். "ஒன்றி யிருந்து நினைமின்கள்" (தேவா). தலைநிற்றல் - சிறத்தல்.
  பூவலரும் இதயம் - பூ - கமலம்; இதயகமலம். "மலர்மிசை ஏகினான்" (குறள்); பொருள் - மெய்ப்பொருள்.
  இதயத்து - இதயத்திலே முன் அரும்பொருள் என்று கூறிய பொருளடங்கிய சிவனுடன் சேர்ந்திருந்தனர்; புணர்தல் - இரண்டறக் கூடுதல்.
 

25

3589
ஊனுடம்பிற் பிறவிவிடந் தீர்ந்துலகத் தோருய்ய
ஞானமுத னான்குமலர் நற்றிருமந் திரமாலை
பான்மைமுறை யோராண்டுக் கொன்றாகப் பரம்பொருளாம்
ஏனவெயி றணிந்தாரை "யொன்றவன்றா" னெனவெடுத்து,
 

26

3590
முன்னியவப் பொருண்மமாலைத் தமிழ்மூவா யிரஞ்சாத்தி
மன்னியமூ வாயிரத்தாண் டிப்புவிமேன் மகிழ்ந்திருந்து
சென்னிமதி யணிந்தார்தந் திருவருளாற் றிருக்கயிலை
தன்னிலணைந் தொருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்.
 

27

  3589. (இ-ள்) ஊனுடம்பில்....உய்ய - ஊன் பொருந்திய இப்பிறப்பாகிய விடத் தொடக்கு நீங்கி உலகத்திலுள்ளார்கள் உய்யும் பொருட்டு; ஞானமுதல்....... மாலை - ஞான முதலாகிய நான்கு நெறிகளும் விரிந்து காணும் நல்ல திருமந்திர மாலையினை; பான்மைமுறை.....ஒன்றாக - பான்மை முறையினாலே ஓர் ஆண்டுக்கு ஒரு மந்திரமாக; பரம்பொருளாம்.....அணிந்தாரை - பரம்பொருளாகியவரும் பன்றியின் கொம்பினை அணிந்தவருமாகிய இறைவரை; ஒன்றவன்தான் என எடுத்து -"ஒன்றவன்றானே" என்று தொடங்கி;
 

26

  3590. (இ-ள்) முன்னிய....சாத்தி - நினைந்த அப்பொருளினையுடைய திருமந்திர மாலையாகிய தமிழ் மூவாயிரம் மந்திரங்களையும் சாத்தியருளி, மன்னிய.....இருந்து - அதன்பொருட்டுப் பெற்ற மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகத்தின்கண் மகிழ்ந்து வீற்றிருந்து; சென்னிமதி......தாளடைந்தார் - திருமுடியில் ஞான சந்திரனைச் சூடிய சிவபெருமானது திருவருளினாலே அவர்தம் திருக்கயிலையினை அடைந்து என்றும் பிரியாதபடி சிவனது சீபாதநிழலிற் சேர்ந்தார்.
 

27

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.