| செய்வர்" (சித்தி-8), "நலஞ் சிறந்த ஞானயோ கக்கிரியா சரியையெலாமலர்ந்த மொழி" (3591) என்று மேற்கூறுதலும் காண்க. ஞானகுருவே இந்நான்குக்கும் குருவாவார் என்பவாதலின் இங்கு ஞானமுணர்த்தும் குருவாகி உபதேசிக்க வந்த நிலையின் அதனை முன்னர் வைத்து ஏனையவற்றைப் படிமுறையிற் பின் வைத்துக் கூறிய தகுதியுங் காண்க. |
| நற் றிருமந்திரமாலை - "மந்திரமாலை" என்பது திருமூலர் இதற்கு இட்ட பெயர்; "மந்திரமாலை" (பாயிரம் 86); நன்மை - வீடு பேற்றின் மிக்கதொரு’ நன்மையில்லை யாதலின், வீடு காதலித்துக் "கதிப்பாற் செல்ல வேறு நெறி" என்று அறிய ஆவல்கொள்ளும் மாணவர்க்கு அதனை அறிவுறுத்த வந்த ஆகமமாதல் குறித்தது. |
| ஒன்றவன்றான் என எடுத்து - "ஒன்றவன்றானே" என்பது திருமந்திர மாலையின் முதற்பாட்டின் தொடக்கம்; "ஐந்து கரத்தனை" என்பது நூலுக்குப் புறம்பே செய்யப்படும் காப்பு எனப்படும் விநாயக வணக்கம்; "போற்றிசைத்துழு என்ற அடுத்த பாட்டும் நூலுக்குப் புறம்பே சொல்லிய நூனுதலிய பொருளாம். |
| பரம்பொருளாம் ஏன எயிறு அணிந்தாரைச் - சாத்தி என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டுக; எனவே இத் திருமந்திரமாலை முழுதும் சிவபெருமானைப் போற்றியதென்பதாம். என்னை? உலகுய்யச் சிவாகமப் பொருளாகிய பதி பசுபாச நிச்சயத்தினையும், உயிர்கள் சிவனை யடையும் நெறிகளையும் அவ்வாறடையும் அதனால் வரும் சிவானந்தமாகிய பயனையும், கூறுதலானும், உபதேசம் என்பது தொடங்கி இறுதியில் ஒன்பதாந் தந்திரத்துள் தோத்திரம் சர்வவியாபி என்ற பகுதியுடன் "பேரும் பராபரன் பிஞ்ஞக னெம்மிறை, யூறுஞ் சகலனுலப்பிலிதானே" "வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே" என்று முடித்தலானும், இது சிவனுக்குச் சாத்தும் திருமந்திரமாலை யாமாறுணர்க. "கூற்றுதைத்தானையான் கூறுகின் றேனே" என்பது நூனுதலிய பொருளாக நூன்முகத்துக் கூறுதலும் காண்க. |
| ஏனவெயி றணிந்தார் - சிவன். சங்கார காரணன் என்ற குறிப்பு; "கூற்றுதைத்தான்" என்றது நூன்முகம். |
| பரம்பொருள் - எல்லாப் பொருளுக்கும் அப்பாற்பட்டவன்; இது, நூலிறுதியில் "பெரும் பராபரன்" என்ற கருத்தாதலும் கண்டுகொள்க. பண்புத் தொகையாகக் கொண்டு மேலாகிய பொருள் என்றலுமாம். |
| எடுத்துச் - சாத்தி என வரும்பாட்டுடன் முடிக்க. |
| 26 |
| 3590. (வி-ரை) முன்னிய - இறைவர் விரும்பியருளிய; "தமிழ் வகுப்புக் கண்ணிய அத்திருவருளால்" (3586) என்றது காண்க. |
| அப்பொருள் - சடையார் தாம் தந்த ஆகமப் பொருள். |
| மாலை - சாத்தி - மலர்மாலை போல்வதால் மாலை என்றும் சாத்தி என்றும் கூறினார். மேல் “மலர்ந்த மொழி" (3591) என்பது காண்க. |
| தமிழ் மூவாயிரம் சாத்தி - மூவாயிரத்தாண்டு - மகிழ்ந்திருந்து ஓர் "ஆண்டுக் கொன்றாக" (3589) என்று முன்கூறியதனைத் தொடர்ந்து பொருள் கொள்க; முன் கூறியது தொடக்கம்; இங்குக் கூறியது முடிபு; மன்னுதல் - சிவயோகத்தால் நிலைபெற்றிருத்தல். |