பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 31. தண்டியடிகள் நாயனார் புராணமும் உரையும்519

பழுது செய்த அமண் கெட்டது என்று - இஃது அரசன் நேரே கண்டு கூறிய முடிபு.
பகர்கின்றான் - முற்றெச்சம்; பகர்கின்றானாகி - என என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.

20

3612. (வி-ரை.) ஒட்டிக் கெட்ட - ஒட்டிச் சபதம் கூறியதனால் தங்களைத் தாங்களே கேடு செய்துகொண்ட.
அண்டர் போற்றும் திருவாரூர் நின்றும் - அகன்று - தேவர்களும் போற்றும் பெருமையுடைமையால் கீழ் மக்களாகிய இவர்கள் அங்கிருக்கும் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பு. அண்டர்களும் - எனச் சிறப்பும்மை தொக்கது.
கண்ட அமணர் காணாவண்ணம் சொல் அணிநயம்; முரண்டொடை; கண்ட - பல இடத்தும் இருக்கக்கண்ட; எங்கும் காணாவண்ணம் - எவ்விடத்தும் இல்லாதபடி.
துரக்க - இருக்கவொட்டாமல் ஓட்டுக.
வயவர் மண்டி என்க. மண்டி - நெருங்கி; கூடி; சாடுதல் - புடைத்தல்.
கண்கள் காணார் - கண் ஒளியிழந்தமையால் காண இயலாதவர்களாய்; சினை வினைமுதலுடன் முடிந்தது; காணார் - வினைப்பெயர்; முற்றெச்சமாகக் கொள்ளலுமாம்.
மனம் கலங்கி - விழுவாரும்....மயங்குவாரும் ஆயினர் என மேல்வரும் இரண்டு பாட்டுக்களுடனும் கூட்டி முடிக்க.

21

3613. (வி-ரை.) குழியில் விழுவார்....வழியீதென்று தூறடைவார் - கண்காணாமையால் வழிநடப்பார் இவ்வாறு துன்புறுவர்; கண்ணுளார்க்கும் இருளிரவில் இவ்வாறு நிகழ்வதுண்டு; "கட்புலன் றெரியாது கொட்புறு மொருவற்குக், குழி வழி யாகி வழிகுழி யாகி, யொழிவின் றொன்றி னொன்றுதடு மாற, வந்தாற் போல" (பட்டினத்தார் - திருக்கழுமல மும்மணிக்கோவை - 10)
கோலுமில்லை - கோல் - ஊன்றுகோல்; கோல் வழிதடவி யறிந்த செல்லவுதவுவது; ஆளுடைய நம்பிகளுக்குத் திருவொற்றியூரில் கண் மறையத் திருவெண்பாக்கத்தில் இறைவர் ஊன்றுகோல் அருளிய வரலாறு காண்க; ஊன்றுகோலிலாதார் காலினாற் றடவிச்சென்று வழியறிவர். "காலினாற் றடவிச் சென்று" (457)
தூறு - புதர்; இவை வழியருகில் முளைத்துள்ள குறுமுட் செடிகள்; தூறு - கல்லும் மண்ணு மொதுக்கித் தூற்றப்பட்டமையால் வழிகளி னருகில் குவிந்துள்ள சிறு மேடுகள் என்றலுமாம்.
மாண்டோம் - வழி யறியாது செல்வதனால் இடறி வீழ்ந்து மாள்வது நிச்சயம் என்ற கருத்து; உறுதி பற்றி இறந்த காலத்தாற் கூறியதாம்; மாள்வது போன்ற துன்பம் எனவந்த இரக்கச்சொல் லென்றலுமாம்.
மதி கெட்டீர் - தம்மினத்தவரை நோக்கித் தாமே இழித்துரைத்துக் கொண்டது; மதிகெட்டோம் என்ற பாடமுமுண்டு.
அழியும் பொருளை யட்டித்து இங்கு அழிந்தோம் - வட்டித்தல் - ஒட்டுதல்; சபதம் கூறுதல். அழியும் பொருள் - நம்பியிருந்த தம்மைக் காப்பாற்ற வியலாது தமக்கு அழிவு தேடித் தந்துவிட்ட தமது சமயக் கொள்கைகள்; பொருள் - பொருளை நம்பி என்க. "நம்பி" என்பது இசையெச்சம். வழிபட்டு - என்ற பாடமுண்டு.
அரசனுக்குப் பழியீதாமோ? ஆமோ? வினா ஆகாது என எதிர்மறை குறித்தது; ஈது - இவ்வாறு வயவரைக் கொண்டு சாடித் தம்மை ஊரினின்றும் துரத்துதல்.