| |
| சங்கிலியாரது பெரிய மூங்கில் போன்ற இரண்டு தோள்களையும் அணைந்த; அவன்...அற்புதனே - அவர் திருவாரூரர் என்ற சொல்லப்படும் அற்புதராவார். |
| துணை - ஒப்பு; "தனக்குவமை யில்லாதான்" (குறள்); கணை - வேல் - கயல் - பிணை - இவை கண்களுக்கு ஒப்பாக உவமிக்கப்பட்டன; கணை - வேல் - இரண்டும் ஊடுருவிப்பாயும் நிலைக்கும்,கயல் - கண்ணின் பிறழ்ச்சிக்கும் உவமைகள்; இவை வடிவும் தொழிலும்பற்றி வந்தன; "காட்சியிற் கண்ணினார்" (35) என்று முன்னை நிலையினும், "என்னை யுள்ளந் திரிவித்தாள்" (3382) என்று இம்மை நிலையினும் பாய்ந்த நிலைகுறிக்க இரண்டு ஒற்றைப் பொருள்களால் உவமித்தார்; "காவியினேர் கண்ணாருங் கண்டுமிக மனங்கலங்கிப், பாவியே னிதுகண்டேன்" (3415) என்ற கண்ணீர்மை குறிக்கக்கயல் என்றார்; நீரினில் வாழ்வதும் பிறழ்வதும் பொதுத்தன்மை; பிணை - பெண்மான்; அன்புக் கறிகுறியாவன; "அன்புறு காதல்கூர வணையுமான் பிணைக ளோடும்"(653); மகிழடியின் ஒன்றும், மணத்திறத்தினில் ஒன்றும் ஆக இரண்டு நிகழ்ச்சிகளின் பார்வைக்கு இவை இரண்டும் இணைகளாகக் கூறிய நயமும் கண்டுகொள்க. அமை - மூங்கில்; அற்புதன் - இன்ன படியென் றறியலாகாத பெருமையன். |
| விரி: 3635. (இ-ள்) பணையும்..ஒற்றியூரில்; வயல்களும் வாவிகளும் பக்கமெங்கும் சூழும் திருவொற்றியூரிலே; பாகத்தோர்...பிரியாதார் - தமது ஒரு பாகத்திலே துணைவியாகிய உமையம்மையாரும் தாமும் பிரியா துள்ளவராகிய இறைவர்; தோழத் தம்பிரானாரை....அணையும் - தம்பிரான் றோழரை இணையாகிய தனங்களையுடைய சங்கிலியாரது அழகிய மெல்லிய பணைத்த தோள்களை அடையும்படிச் செய்ய, அதனாற் சென்றணையும்; ஒருவர்.....அடைந்தோமே - ஒருவராகிய நம்பிகளது திருவடிகளையே நமக்குக் காப்பாக அடைந்தோம் |
| (வி-ரை) ஒற்றியூரில் - எய்துவிக்க - அணையும் என்று கூட்டுக; ஒற்றியூரில் பிரியாதார் என்ற கூட்டி யுரைக்கவும் நின்றது. |
| ஓர் பாகத்துத் துணையும் என்க; துணை - உமையம்மையார்; துணைவியார்; தம்பிரான் றோழரை - என்க; தோழனாராதலின் எய்துவிக்க என்ற காரணக்குறிப்புடன் நின்றது. |
| எய்துவிக்க அணையும் - எய்துவித்தலால் அணையும். |
| அரணம் - காவல்; ஆணவத் தீங்கு வராமற் காக்கும் மதில். |
| வகைநூலுட் போந்த கருத்தினையே ஒட்டிக் கூறிய பண்பும் பொருளும் காண்க. யாப்பின் எதுகையும் அவ்வாறே அமைத்தநிலை எத்துணையளவு வகை நூலாசிரியரை ஆசிரியர் அடியொற்றிச் செல்கின்றார் என்பதனை உணர்த்தும், இத்துதியின் விரிவு இச்சருக்கத்துட் போந்த நம்பிகளது சரிதப் பகுதியாதலும் கண்டு கொள்க. |
| ஆறாவது வம்பறா வரிவண்டுச் சருக்கம் முற்றிற்று |
| |