| |
| ளாற் பெருமழை பெய்து எங்கும் பெரு வெள்ளமாயிற்று; பின்னர் அப்பெரு மழையினைத் தடுக்க மேலும் பன்னிரு வேலி நிலம் தந்து வேண்ட, அது நின்ற தென்பது வரலாறு. "வையக முற்று மாமழை மறந்து வயலி னீரிலை மாநிலந் தருகோம், உய்யக் கொள்மகற் றெங்களை யென்ன வொளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும், பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளும், செய்கை" என்று ஆளுடைய நம்பிகள் இவ்வரலாற்றைப் பொறித்து வைத்த திருவாக்கைக் காண்க. முன்னர்மழை பெய்யப் பன்னிரு வேலியும், பின்னர்மழை ஓயப் பன்னிரு வேலியுமாகத் தருதலின் அதிகமாயின என்று இக்குறிப்புப் பெறுவித்தல் காண்க; ஒருகாலத்துத் தமக்கு நேர்ந்த நோய் நீங்குதற் பொருட்டுக் கலிக்காமனார்பன்னிரு வேலி நிலம் தந்தனர்என்ற வரலாறும் "ஏத நன்னில மீரறு வேலி யேயர்கோனுற்ற விரும்பிணி தவிர்த்து" என்ற நம்பிகளது திருவாக்கால் பெறப்படுகின்றது. இவையேயன்றி ஏயர்கோனார் திருப்புன்கூரிறைவரையே ஆன்மார்த்தமாக வழிபட்டு நற்றிருப்பணிகள் அனேகமுஞ் செய்தனர் என்ற வரலாறும் கேட்கப்படுகின்றது. திருப்பணி அநேகம் என்றது இக்குறிப்பு. திருப்புன்கூர் நாயனாரது பதியாகிய திருப்பெருமங்கலத்துக்கு அருகில் தெற்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது. (I பக். 312. தலவிசேடம் பார்க்க.) |
| "நிதியமாவன....கழல் என்று - இது நாயனார் உட்கொண்டொழுகிய குறிக்கோள். "அளித்துப் பெருஞ்செல்வ மாக்குமை யாற னடித்தலமே" (திருவிருத்தம்) "நெதிய மென்னுள போகமற் றென்னுள நிலமிசை நலமாய, கதிய மென்னுள.......ஏத்துதல் புரிந்தோர்க்கே'; (அம்பர்மாகாளம் - பண் - நட்டராகங். பிள்.) முதலியவை காண்க. "பாரோடு விசும்பாட்சி யெனக்குமது பாதமலர்" (கழறிற். புரா. 159) என்று கூறும் கழறிற்றறிவார்நாயனார்கருத்தும் காண்க. |
| நீறுகந்தார் - திருநீற்று நெறியே சிவநெறியாவது என்பதை மெய்ப்பொருளார், ஏனாதியார், புகழ்ச் சோழர் முதலியோர் சரிதங்களால் அறிக. நீறு உலகந்தார் என்பது நீற்றினை விரும்பியணிந்தார் என்பதன்றி, நீறு ஆகு பெயராய் நீற்று நெறி நிற்கும் திறத்தினை உணர்த்தித் திருநீற்றின் அடிமைத் திறத்தினை உகந்து அருள்பவர் என்ற குறிப்பு முணர்த்திற்று. |
| என்று - என்பது மனநிலை, பரவி - வாக்குநிலை, தொழுது - மெய்ந்நிலை, என்ற திரிகரண வழிபாடுங் காண்க. |
| இன்புறுகின்றார் - அடிமைத்திறம் பற்றி நின்று அதில் இன்புற்று வாழ்தல் அன்புடைமையின் சிறப்பு. "ஆடுவதும் பாடுவது மானந்த மாகநினைத், தேடுவது நின்னன்பர்செய்கை பராபரமே" (தாயுமானார்): "சிரிப்பார்களிப்பார்தேனிப்பார்....." (திருவா.) |
| இன்புறுகின்றார் - இன்புறுகின்றாராகிய கலிக்காமனார். வினைப்பெயர்; இன்புறுகின்றார் - அவர் இழிப்ப - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. இவ்வாறன்றி வினை முற்றாகவே வைத்து உரைப்பினு மிழுக்கில்லை. நிகழ் காலத்தாற் கூறியதனால் இஃது அவரியற்கை என்றுணர்த்தியபடி. "முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை, யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து, மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல்வேண்டும்" (தொல். சொல். வினை. 43) என்பதிலக்கணம். இதனையே "முக்காலத்தினு மொத்தியல் பொருளைச், செப்புவர்நிகழுங் காலத் தானே" என நன்னூலார்வகுத்துரைத்ததும் காண்க. இப்பாட்டினால் அரன்பணியும், முன்பாட்டினால் அடியார்பணியுமாக நாயனாரது அடிமைத் திறத்தினியல்பு கூறப்பட்டது. |