சரிதச் சுருக்கம்:- உமையம்மையாரது திருமுலை ஞானப்பாலுண்டருளிய ஆளுடைய பிள்ளையார் அவதரித்த சிறப்புடைய சீகாழிப் பதியில் மறையவர் குலத்தில் அவதரித்தவர் கணநாத நாயனார். |
அவர் திருத்தோணியப்பருக்கு நாளும் அன்பொடு பணி செய்தனர். விரும்பி வந்து அணையும் அன்பர்களைக் கைத்திருத் தொண்டினில் அவ்வத்துறைதொறும் பயில்விப்பார். |
நந்தன வனப்பணி செய்வோர், மலர் பறிப்போர், மாலை புனைவோர், திருமஞ்சனம் கொணர்வோர், திருவலகு திருமெழுக் கமைப்போர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர் என்றிவ்வாறுள்ள பல பணிகளிலும் விரும்பி அணைந்தவர்க்கு அவரவர் செயல் விளங்கிட அவ்வவர்க்குள்ள குறைகளை எல்லாம் முடித்துப் பொருந்தும்படி செய்து தொண்டர்களை ஆக்கினர். |
இல்லறத்தில் வாழ்ந்து அடியார்களை வழிபட்டனர். ஆளுடைய பிள்ளையார் திருவடியில் மூண்ட அன்பொடு நாளும் முப்போதும் வழிபாடு செய்தனர். |
இவ்வாற்றால் இறைவரது திருக்கயிலை மாமலையில் சேர்ந்து கணங்களுக்கு நாதராகி வழித்தொண்டின் நிலைபெற்றார். |
குறிப்பு:- இவரது கோயில் திருக்கோயிலுக்குள் ஒன்றும், திருவீதியில் ஒன்றும் உள்ளன. அவற்றுள் முன்னையது அவர் திருவடி யடைந்த இடம் என்றும், பின்னையது அவரது இல்வாழ்க்கைத் திருமனை இருந்த இடம் என்றும் கருதவுள்ளன. |
| - - - - - |
கற்பனை:- 1. பல பதிகள் அவற்றின் வந்தவதரித்த பெரியோராற் சிறப்புப் பெறுவன. ஆளுடைய பிள்ளையார் வந்தவதரித்தமையாற் சிறப்புப் பெற்றது சீகாழித் திருநகரம் (3923). |
2. கைத்திருத் தொண்டினில் அணைந்த அன்பர்களைப் பயிற்றுதல் சிறந்த திருத்தொண்டு (3924) |
3. திருமுறை எழுதுதல் வாசித்தல் இவை சிறந்த சிவத்தொண்டாகிய ஞானபூசையாம் (3925). |
4. தொண்டு செய்யும் விருப்புள்ளோர்களை அவ்வவர் தகுதிக்கேற்ற அவ்வத்துறைதொறும் பயிற்றுதலும், அவர்களது குறையெலாம் முடித்து மேவிடச் செய்தலும், இவ்வாறு தொண்டரை ஆக்குதலும் சிவன்பணியாகிய சரியைப்பணிகளேயாம் (3926). |
5. ஆளுடைய பிள்ளையார் திருவடிகளை அன்புடன் நாளும் முப்பொழுதும் வழிபடுதல் குருவழிபாடாகிச் சிவலோகத்திற் சேர்க்கும் தன்மையுடைய சிறந்த சாதனம் (3927). |