பக்கம் எண் :

பெரியபுராணம்293

     பொய்யை...ஆட்பட்டு - இஃது நாயனாரது சிறப்பு; தன் அடியான் வர -
தமது ஏவலளாயிருந்தவன் சிவனடியார் திருவேடத்தினைத் தாங்கி வரவும்; தான்
அவரது கால்கழுவ நீர்வார்க்காது விட; வெள்கி - வெள்கியதால்; மனைவி - மனைவி
நீர்வாராவிட என்றும், மனைவி கையினை என்றும் இருவழியும் கூட்டி உரைக்க
இடையில் வைத்தார்; கலிக்கம்பனே - கைதடிந்தவன் என்று கூட்டுக.
 

     பெயரும் சரித வரலாறும் பண்பும் தொகைநூல் தொகுத்தது. ஊரும் பெயரும்
வரலாறும் பண்பும் வகைநூல் வகுத்தது. இவை விரிந்தவாறு விரிநூலுட் கண்டு கொள்க.
 

     விரி; 4012. (இ-ள்) உரிமை....மரபின் - உரிமையாகிய நல்லொழுக்கத்திற் சிறந்த
உயர்ந்த தொன்மையான மரபிலே; நீடும்மனை...தன்மையதாம் - நீடுகின்ற
இல்லறநெறியில் வாழும் குடிகள் தழைத்தோங்கும் தன்மையினையுடையதாகி; வரும்
மஞ்சு.......பெண்ணாகட மூதூர் - வருகின்ற மேகங்கள் தங்குதற் கிடமாகிய
மலர்ச்சோலைகள் பக்கங்களிற் சூழ்ந்த வளமுடைய புறம்பணைகளுடன், உலகம்
பெருமையினைப் பொருந்தவிளங்குவது மேற்குத் திசையில் உள்ள
திருப்பெண்ணாகடமென்னும் பழைய ஊர்.
 

     (வி-ரை) உரிமை.....மரபின் - மரபுகள் ஒவ்வொன்றும் தத்தமக் குரியனவாய்
விதிக்கப்பட்டனவும், ஆன்றோராசாரத்தால் வருவனவுமாகிய ஒழுக்கத்தின் வழுவாது
சிறந்து இருத்தல் வேண்டுமென்பது. அறநூல்களாலும் தொல்காப்பிய முதலிய
பழநூல்களாலும் இவ்வொழுக்கங்கள் விதிக்கப்படுவன.
 
     மனைத் தருமநெறி - இல்லற வாழ்க்கைநிலை; உரிமை ஒழுக்கம் தலைநிற்றலை
இதனுடனும் கூட்டுக.
 
     குடிகள் - மரபின் உட்பிரிவு குடி எனப்படும்.
 
     புறவு - இங்கு முல்லைப் புறவு.
 
     உலகு பெருமை பெற - பெண்ணாகடமூதூர் - விளங்கும் - என்று கூட்டுக.
இந் நகரின் பெருமையினால் உலகம் பெருமை பெறுவதாம் என நகரச்
சிறப்புரைத்தவாறு. குடிகளின் நல்லொழுக்கச் சிறப்பினாலே நாடும் நகரமும் பெருமை
பெறுவன என்பதுமாகும்.
 
     இத்தலத்தில் ஆளுடைய பிள்ளையார் “தீங்கு நீங்குவீர் தொழுமின்” என்று
உலகினரை நோக்கி ஆணையிட்டருளித் திருப்பதிகம் பாடியருளிச் செல்லும்போது,
வழியின் மாறன்பாடியில் எழுந்தருளிய காலைத் திருவரத்துறை நாதரால் முத்துச்
சிவிகை முதலியவற்றைப் பெற்று உலகை விளக்கினர். அரசுகள் தோளில் இடபமும்
சூலமும் பொறிக்கப் பெற்றனர். பின்னர், இதில் அச்சுத களப்பாளர் வாழ்ந்து
உலகுக்குச் சிவஞான உபதேசம் செய்து வாழ்விக்க வரும் மெய்கண்ட தேவநாயனாரைப்
பெற்றுள்ளார். இக்குறிப்பெல்லாம் பெறவைத்து உலகு பெருமைபெற விளங்கும்
என்றார்.
 
     மனைத் தரும நெறியாற் பெருமை பெற என்று கூறியது - இச்சிரிதத்தினுள்
மனையறம் விளங்கி உண்மைப் பேறு தருவது சிவனடியாரைப் பேணுதலாலாவதாம்
என்ற உண்மை விளங்கும் குறிப்புத் தருவது. மனைக்கண் இருந்து மனையாளோடு
வாழ்ந்து செய்யும் அறம். ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.
 
     மேல்பால் - மேற்குத் திசையில்; நடுநாட்டின் மேல்கோடியில் திருமுது
குன்றத்தினை அடுத்து உள்ளது இத்திருப்பதி.                            1