பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்314

அவரது இருவினை மாண்டது போல, மாட்சிமைத்தாக மாண்டது. செல்வம் தேய்ந்த
பின்னும் தமது திருத்தொண்டின் வழுவாமல் பிறரிடத்து எண்ணெய் பெற்று விற்றுக்
கொடுத்து அவர் தரும் கூலியினால் பணி செய்து வந்தனர். சில நாளில் அவர்களும்
கொடாமையின் செக்காட்டும் களத்தில் தொழில் செய்து பெறும் கூலியினால் மிக்க
திருவிளக்கிட்டார். பின் சில நாளில் அத்தொழில் செய்வோரும் பலராகவே
அவ்வருவாயும் கிடையாதாயிற்று. பின் தமது மனையை விற்று எரித்தார் அப்பொருளும்
மாண்டது. பின் தமது மனைவியாரை விற்பதற்கு வழிதேடினர். அவ்வாறு கொண்டு
தனங்கொடுப்பார் கிடையாமையாற் றளர்ந்தனர்.
 

     திருக்கோயில் சார்ந்தனர். திருவிளக்குப் பணிமாறும் சமயமாயிற்று . நெடுநாள்
செய்த திருவிளக்குப் பணி மாளில் நான் மாள்வதே தகுதி என்று துணிந்தனர்.
அகல்களைப் பரப்பினர்; திரியிட்டனர்; தமது உடல் உதிரமே எண்ணெயாக வார்க்கத்
துணிந்து கருவிகொண்டு மிடற்றினை அரியலுற்றனர். இறைவர் வெளிப்பட்டு அக்
கையைப் பிடித்தருளி விடைமேற் காட்சி தந்தருளினர். அவர் ஊறு நீங்கி ஒளி விளங்க
வணங்கினர். அவரைத் தமது சிவலோகத்திற் பொலிீந்திருக்க இறைவர் அருள்
புரிந்தனர்.
 

     கற்பனை: 1. நகர அமைப்பில் ஒவ்வோர் தொழில் செய்வோர்க்கு ஒவ்வோர்
தனித் தெருவுகள் அமைவது முன்னைநாட் சிறந்து வழங்கிய ஒழுங்கு. (4026)
 
     2. ஒவ்வோர் குலத்திலுள்ளோர் அவ்வக் குலத்தொழிலினின்றே அதற்கேற்றபடி
உரிமைத் திருத்தொண்டு செய்தல் சிறந்தமரபாகும். திருநாளைப் போவார் நாயனார்
சரித முதலியவை பார்க்க. (4027)
 
     3. செல்வமுள்ள காலத்தும் அது வறண்ட காலத்தும் ஒன்று போலவே தாம்
நியமமாகக் கொண்ட தொண்டின் நெறி பிறழாது பணி செய்தல் அன்பின்
உறைப்புடைய பெரியோ ரியல்பு. (4030)
 
     4. செல்வமுள்ள காலத்தில் உறைப்புடன் பணி செய்வோர்க்கு வறுமை வருதல்
அவ்வுறைப்பினில் உறுதிப்படுத்தி உலகறியச் செய்ய இறைவர் வைக்கும்
அருட்செயலாம். (4029)
 
     5. மெய் வருந்திச் செய்யும் தொழிற் கூலி கொண்டும் தமது பணி செய்தல்
பெரியோர்பாலே காணும் தன்மை; அரிவாட்டாய நாயனார் சரித முதலியவை பார்க்க.
(4030 - 4031- 4032)
 
     6. மனையை விற்றும், மனைவியை விற்றும் இறை பணிமுயற்றுதல் அன்பின்
உறைப்பினாலாகுவது. (4033)
 
     7. தாம் நியமமாகச் செய்த திருப்பணி முட்டுப்படக் கண்டபோது உயிர் நீத்தலே
தகுதி என்பது பெரியோர் கொள்கையும் செய்கையுமாம். (4035).
 
     தலவிசேடம்;- திருவொற்றியூர் - III - பக்.. 571. பார்க்க.
 

கலிய நாயனார் புராணம் முற்றும்.