“வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென்...வேலைநஞ்சுண், டூனமொன்றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே” (அரசு - திருவிருத்) என்ற திருவாக்கின் கருத்துக் காண்க; நீற்று நெறியே சிவநெறியாதலின் சிவனுக்காட்பட்ட தன்மையினைத் திருநீறுதரும் என்பதாம். இறைவர்களே - வித்தகர் என்க; வித்தகம் - ஞானம்; அறிவின் மேன்மை. ஊழிதிரிதல் - காலநிலை மாறுபடுதல்; உலகம் இடத்தையும், ஊழி காலத்தையும் குறித்து நின்றன. விலகுதல் - தந்நிலையிற் றிரிந்து மாறுபடுதல்; ஒருகால் - ஒருகாலும்; அலகில் பெருங்குணம் - அளக்கலாகாத எண்குணங்கள்; அடிக்கீழ் இலகு வெண்ணீறு - “திருவடி நீறெனைப் பூசு” (அரசு - தேவா.) உள் - உள்ளம்; விதி - தன்மை. |
விரி :- 4163. (இ-ள்) ஆதாரமாய்....குழையான் - எல்லாவற்றுக்கும் ஆதாரமாயும் எல்லாப் பொருள்களுமாகியும் நின்ற அங்கணனும், எமது பெருமானும், கங்கையைத் தரித்த சடையினையும் காதிற்பொருந்திய குழையினையும் உடையவரும் ஆகிய சிவபெருமான்; அருளிச்செய்த - சிவாகமங்களில் அருளியவற்றுள்ளே; ஆகாதென்று.....நீக்கி - கைக்கொள்ளத் தகாதென்று அங்குச் சொல்லிய அகற்பம் என்ற வகையுட்பட்டதனை நீக்கி; கற்பம்...தானாம் - கற்பமும் அநுகற்பமும் உபகற்பமும் என்ற; ஆமென்று.....பேதம் - இவை கொள்ளத்தக்கன வாகுமென்று முன்னே கூறிய மூன்றுவகைப்பட்ட; மோகாதி....நீற்றை - காமாதி குற்றங்களை நீக்கும் திருநீற்றினை; மொழிகுதும்.......ஆக - நமது இருவினைகளுக்கு கழிவு நேர்வதற்காக மொழிவோம். |
(வி-ரை) இதுமுதல் ஐந்து பாட்டுக்களும் பல பிரதிகளில் இல்லை. இவை ஐயப்பாடு; இவை திருநீற்றின் வகைகளையும், தன்மைகளையும், பெறும் பரிசினையும் கூறுவன. 1இவற்றைப்பற்றிய ஐயப்பாட்டின் விவரங்கள் எனது “சேக்கிழார்” என்ற நூலினுள் (பக் - 221 - 223) விரித்துள்ளேன். ஆண்டுக் கண்டுகொள்க. இவற்றின் பொருளைப் புராண சாரமுடையார் அமைத்துள்ளமையின் இவை முன்பே புகுத்தப்பெற்றிருத்தல் கூடும் என்று கருதப்படுகின்றது. |
ஆதாரமாய் - எல்லாப் பொருள்கட்கும் ஆதாரமாய் உள்ளவர்; ஆதாரம் - தாங்குதல் - நிலைபெறுவித்தல், மாயையினின்றும் தோற்றுவித்தல் என்ற பொருளில் வந்தது. ________________ |
1 பெரியபுராணச் செய்யுட்டொகை மொத்தம் 4283 என்று கொண்ட ஒரு வெண்பாவை ஆதாரமாக் கொண்டு அதனையே தாபித்துத் திருவாவடுதுறைவித்துவான் திரு. சிதம்பர இராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஞானசம்பந்தம் பத்திரிகையில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார்கள். அதனுள், “திருவிருத்த நாலாயிரத்திரு நூற்றைம்பத்து மூன்றாக வகுத்து” என்று புராண வரலாற்றுள் (53) வரும் பாட்டுப்பாடபேத மென்றும், அது “எண்பத்து மூன்றாக” என்றிருத்தல் வேண்டுமென்றும் சாதித்துள்ளார்கள்; திரு. நாவலரவர்கள் பதிப்பாக வழங்கும் பதிப்புக்களில் 4281 பாடல்களே மொத்தம் காணப்பயிலுகின்றன. “காதில் வெண்குழையோன்” (18) என்ற திருமலைச் சிறப்புப்பகுதியிலுள்ள பாட்டும், கண்ணப்பநாயனார் புராணத்துள் “பொருப்பினில் வந்து” என்பது முதல் “மன்பெருமா” என்பது வரை (158 -162) ஐந்து பாட்டுக்களும், இங்கு முன் காட்டியபடிவரும் ஐந்து பாட்டுக்களும் இடைச் செருகல்களான வெள்ளி பாடல்கள் என நீண்டகாலமாகப்பல பெரியோர்களாலும் துணியப்பட்டன என்பது இங்குநினைவு கூர்தற்பாலது. I சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள் I பக்கம் 79 - பழைய ஏட்டு சுவடியின் படம்பார்க்க. |