எண்ணாமல் முயன்றனர்; எவ்வாற்றானும் வருந்திப் பொருள் தேடினர்; ஆனால் சிறிதும் பொருள் பெறாது வருந்தினர். |
மனத்தினாலே கோயிலமைக்கத்துணிந்தனர். மனத்தின்கட் சிறிது சிறிதாகத் தேடிப் பெரும்பொருள் திரட்டிக் கொண்டனர். அவ்வாறே கல் மரம் முதலிய சாதனங்களையும் தச்சரையும் மனத்தாற் தேடினர். நன்னாட்கொண்டு அன்பினாலே இரவும் துயிலாமல் கோயில் எடுத்தனர். அடிமுதல் உபானமாதியாகிய வரிசைகளை எல்லாம் வகுத்தனர். உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்தனர்; தூபிநட்டனர்; சுதை வேலையும் நிறைவாக்கினார்; கூவல், மதில், வாவி முதலாக வேண்டுவன எல்லாம் செய்து, இறைவரைத் தாபிக்க நன்னாளும் வேளையும் வகுத்தனர். |
இதனிடையில் காடவ அரசன் கச்சியில் சிவனுக்குக் கற்றளி எடுத்துப், பெருஞ்செல்வம் வகுத்துச், சிவனைத்தாபிக்க அந்நாளையே குறித்தனன். |
அதன் முன்னாளிரவில் அரசனது கனவில் இறைவர் எழுந்தருளி “நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்மை நீடும் ஆலயத்தில் நாளை நாம் புகுவோம்” உனது தாபனத்தை நாளை ஒழித்துப் பின்னர்க் கொள்வாய்!” என்றருளி மறைந்தருளினர். |
தொண்டரது பெருமையை உலகில் விளக்கி உலகுய்யச் செய்ய இறைவர் இவ்வாறு அருளவே, அரசன் துயிலுணர்ந்து எழுந்து அந்தப் பெரிய திருப்பணி செய்தவரைச் சென்று நான் காண வேண்டுமென்று மிகவும் விரும்பித் திருநின்றவூர் வந்து சேர்ந்தான்; அங்கு அருகணைந்தார்களைப் பூசலார் செய்த கோயில் எங்கு உளது என்று கேட்டான். அவர்கள் அவ்வாறொன்று மில்லை என்றனர். அவ்வூர்ப்பெருமறையவர்களை அழைத்துப் பூசலார் ஆர் என்று கேட்டான். அவர்கள் அவர் இவ்வூரினர்; குற்றமற்ற வேதியர் என்றனர். அவர்களழைக்க வொட்டாது தானே அவரிடம் சென்று “தேவரீர் எடுத்த ஆலயம் யாது” இன்று சிவனைத்தாபிக்கும் நாள் என்று இறைவர் அருளத் தெரிந்து உம்மைக் கண்டு பணியவந்தேன்; என்றான். அவர் மருண்டு, என்னையும் பொருளாக இறைவர் அருள் செய்தாராயின், அகக்கோயிற் பெருமை இருந்தவாறு என்னே என்று சிந்தித்து வணங்கிக் கொண்டு, மனத்தால் முயன்று செய்த கோயிலின்னதென்று எடுத்துச் சொன்னார். அரசன் அதிசயித்து அவரை நிலமுறத் தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றனன். |
பூசலார் தமது மனக்கோயிலில் நல்வேளையில் சிவனைத் தாபித்துப், பின்பு சனைகள் எல்லாம் பல நாட்பேணிச் செய்திருந்து சிவனடி நீழலடைந்தனர். |
கற்பனை :- (1) நல்லொழுக்கமுடைய குடிகள் வாழப்பெற்றதே சிறந்த நாடு. (4172). |
(2) மறையவர் பிறப்பொழுக்கம் குன்றாது ஒழுகுதல் வேண்டும். இஃது எல்லாக் குலத்தாருக்கும் ஒத்ததாயினும், மறையவர்க்குச் சிறப்பாய் வேண்டப்படுவது, (4172). |
(3) சிவன்பா லன்புட னுதித்துத், தாம் வளர அன்பும் வளர நிகழ்வது தவப்பயன். (4173). |
(4) சிவன்பாலன்பார்க்காம் பணி செய்தலே ஒருவர்க் கடுப்பது. |
(5) எவ்வகையானும் பொருள்தேடிச் சிவன் அடியவர்க்குக் கொடுத்தல் சிவபுண்ணியமாம். |
(6) சிவனுக்குக் கோயில் அமைத்தல் சிறந்த சிவபுண்ணியம். |