| வாய்ந்த சிபிச்சக்கரவர்த்தியின் மரபாகிய சோழமரபினர்களின் உரிமையாகிய சோழ நாட்டில், காவிரிக்கரையில், சந்திரதீர்த்தத்தின் பக்கத்தில் பெரு மரங்கள் நிறைந்த கானம் ஒன்று உண்டு; அதில் ஒரு வெண்ணாவல் மரத்தினடியில் இறைவர் வெளிப்பட்டருளினர்; அத்திருமேனியைக் கண்டு மிக்க தவத்தையுடைய தொரு வெள்ளானை கையினால் நல்ல நீரை முகந்து அவரைத் திருமஞ்சனம் செய்து பூச்சூட்டி வணங்கி நாளும் வழிபட்டுவந்தது. அதனால் அதற்குத் திருவானைக்கா என்று பெயராயிற்று, அங்கு ஞானமிக்கதொரு சிலம்பி இறைவரது திருமுடிமேல் கானல் மரங்களின் சருகு விழாதபடி தனது வாய்நூலால் மேற்கட்டிபோல் நூல்வலயப் பந்தர் செய்தது; யானை வணங்கச் சென்றபோது அதனை அநுசிதமென்று நினைத்துச்சிதைந்தது; அதுகண்ட சிலம்பி யானையின் கை சுழன்றதால் நூற்பந்தர் சிதைந்ததென்று கொண்டு, மறுநாள் மீளஇழைத்தது; அதனை மறுநாளும் யானை அழிக்க, “இறைவர் திருமுடிமேல் சருகுவிழாதபடி நான்வருந்தி இழைத்த நூல் வலயத்தை இவ்வாறு யானை அழிப்பதோ?” என்று கோபித்து, எழுந்து, சிலம்பி, யானையின் துதிக்கையினுள்ளே புகுந்து கடித்தது; அவ்வருத்தம் பொறாமல் யானை கைநிலத்தில் மோதி வீழ்ந்திறந்தது; அதன் துதிக்கை யினுள்ளே புகுந்து கடித்த சிலம்பியும் உயிர் நீங்கிற்று; இறைவர் அருள்புரியும் வழியால் யானைக்கு வரங்கொடுத்து வீடளித்தனர்; வழிபட்ட முறையினால், சிலம்பியைச் சோழர் குலத்தில் வந்து உதித்து உலகங்காத்து முறையாலே சிவத்தொண்டு செய்து பின்னர் வீடுபெற அருள்புரிந்தார். | அந்நாளில் சோழ அரசனாகிய சுபதேவன் தனது பெருந்தேவி கமலவதியுடனே திருத்தில்லை சார்ந்து இறைவரை வழிபட்டனன்; அவர்களுக்கு மக்கட்பேறில்லாமையால் தேவி வரம்வேண்ட இறைவர் அருள்புரிந்தனர். பெருந்திருப்பணி செய்த சிலம்பி அரசியாகிய கமலவதியின் கருப்பத்துள் மகவாய்ச் சார்ந்தது.; கருப்பநாள் நிரம்பி மகவுபெறும் வேளை வந்தபோது சோதிடர்கள் இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாயின் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும் என்றனர். அது கேட்ட கமலவதி “அவ்வாறு ஒரு நாழிகை கழித்துப் பிள்ளை பிறக்கும்படி என்காலைப் பிணித்து மேலேதூக்கி நிறுவுங்கள்” என்ன, அவர்கள் அவ்வாறே செய்தனர். ஒரு நாழிகை கழித்து அவர்கள் சொல்லிய காலம்வரக் கட்டு அவிழ்த்துவிடக் கமலவதி குழவியை ஈன்றெடுத்தார். அதனுடைய கண்கள் கால நீட்டிப்பினாற் சிவத்திருந்தமைகண்டு “என் கோச்செங்கணானோ?” என்று அருமைபட வழைத்துத் தேவி யிறந்தனள். அரசன் அக்குழந்தையை தன் உயிரேபோன்று அருமையாக வளர்த்து உரியபருவத்தில் முடிசூட்டித் தான் தவநெறி சார்ந்து சிவலோக மடைந்தான். | கோச்செங்கட்சோழர் இறைவரருளால் தமது முன்னைப் பிறப்பின் நினைவுடனே வந்து பிறந்து உலக ஆட்சிபுரிந்தமையால் இறைவருக்குப் பெரிய ஆலயங்கள் எடுக்கும் கடப்பாட்டினை மேற்கொண்டனர். தாம் முன்பு திருவானைக்காவில் அருள் பெற்றதனை அறிந்து அங்கு ஞானச்சார்வாம் வெண்ணாவலுடனே கூட இறைவருக்கு அரிய கோயில் அமைத்தனர். மந்திரிகளை ஏவிச் சோணாட்டில் அனேகம் பகுதிகளில் எங்கும் இறைவருக்குப் பெருங்கோயில்கள் சமைத்தனர். அங்கங்கும் வழிபாட்டுக்கு அமுதுபடி முதலியனவற்றுக்குரிய பெருஞ்செல்வங்களை விருப்பத்தோடு மிகவும் பெருக அமைத்தனர். இவ்வாறு எல்லாத் திக்குக்களிலும் தமது செங்கோல்முறை நிறுத்தினர். திருத்தில்லைப் பதியினைச்சார்ந்து கூத்தப் பெருமானை வணங்கித் தங்கி, அங்குத் தில்லைவாழ்அந்தணர்களுக்குப் பல மாளிகைகள் | | |
|
|