பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்534

 

படுவது. சீகாழியில் வந்தபின்னர் ஆளுடைய பிள்ளையாரது அருள் பெற்றபின்பு
அவருடனேகூட அமர்ந்திருந்து அவர்தம் திருமணத்தில் இறைவரது திருவடி சேர்ந்த
வகையில் உள்ளது அவரது சரிதத்தின் பிற்பகுதி; அதனைப் பிள்ளையாரது சரிதத்துடன்
சார்த்தி முன்பே விரித்துரைத்தனராதலின் அதனை அம்முறையே ஈண்டு
ஒரேபாட்டினாற் (4225) சுருக்கிச் சுட்டிக்கூறியும், முற்பகுதியினைப் (4215 - 4224)
பத்துப்பாட்டுக்களால் விரித்துக் கூறியும் அருளிய அமைப்புக் கண்டுகொள்க. இவ்வாறே
புகழ்ச்சோழரது யானைபற்றிய வரலாற்றினை எறிபத்த நாயனார் புராணத்
தொடர்புடைமை பற்றி முன்னமே 43 பாட்டுக்களால் விரித்துக்கூறிய (561 - 603)
ஆசிரியர், அதனை அவர்தம் புராணத்துள் வரும் முறையே ஒரு பாட்டினாற் (3956)
சுருக்கிக்கூறிய அமைதியும் ஈண்டு வைத்துக் கருதற்பாலது.
 

     மன்னி வாழ்பவர் - அவதரித்து நிலையான குடியிருப்பு வாழ்வுடையவர்.
 
     இறைவன்றன் சீர்திருத்தகும் யாழிலிட்டு - சீர் - சீரை ஏத்தும்
பாடல்களுக்காகி வந்தது; திருத்தகும் - இறைவன் சீர்ப்பாடலிசைகளே
யாழிலிடத்தக்கன; அழிவுடைய ஏனைய போலி யிசைகளை இடுதல் தகாது என்பார்
திருத்தகும் என்பார். பாணனாரது யாழ் இறைவரது சீர்களை இசைத்தற்கே
பயன்பட்டது; இவ்வாறு முன்னர்ப் பண்பட்ட தவத்தாலே பிற்றை நாளில் பிள்ளையாரது
பதிகங்களை அவர் அருளிய ஆங்காங்கும் யாழிலிடப் பயன்படும். மேலும்
அதுகொண்டு வீடுபெறும் பேறும்பெற்றது; திருத்தகும் என்றது அக்குறிப்பும் தருவதாம்.
இங்குக் குறித்தது யாழ்வகை நான்கனுட் பாணனார் கொண்ட சகோடயாழ்; இது 16
நரம்புகளையுடையது. ஏனை மூன்று யாழாவன - பேரியாழ், மகரியாழ்,
செங்கோட்டியாழ், என்பன. இவைமுறையே 21 - 17 - 7 நரம்புகளையுடையன யாழ்
வாசிக்கும்முறை “நல்லிசை மடந்தை நல்லெழில் காட்டி, யல்லியம் பங்கயத் தயனினிது
படைத்த, தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்லியாழ், மெய்பெற வணங்கி மேலொடுகீழ்
புணர்த்து, இருகையின் வாங்கி யிடவயி னிரீஇ, மருவி யவிநய மாட்டுதல்
கடனே”என்பதனானறிக.
     விளங்குகூடல் - இறைவரருள் தரவிளங்க வீற்றிருக்கும் பதி என்பதாம்.
 
     ஆலவாய் - கோயிலின் பெயர்.                                       1
 
4216. ஆலவா யமர்ந்தார் கோயில் வாயிலை யடைந்து நின்று
பாலையீ ரேழு கோத்த பண்ணினிற் கருவி வீக்கிக்
காலமா தரித்த பண்ணிற் கைபல முறையு மாராய்ந்
தேலவார் குழலாள் பாகர் பாணிகள் யாழி லிட்டார்.                      2
 
     (இ-ள்) ஆலவாய்.....நின்று - திருவாலவாயில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரது
திருக்கோயிலின் வாயிலைச் சார்ந்து அங்கு நின்று; பாலை......வீக்கி - பாலையாய் நின்ற
பதினான்கு வகையின் நிறுவிய உரிய பண் பெறும்படி கருவியின் நரம்புகளை முறுக்கி;
காலம்.......ஆராய்ந்து - பண்கள் பலவற்றுள்ளும் அக்காதலத்துக்கிசைந்த பண்ணிலே
வர நரம்புகளைக் கைவிரலின்றொழிலினால் பலமுறையினும் சோதித்துப் பண்ணமைதி
கருவியினில் வரப்பெற்ற பின்னர்; ஏலவார்.....இட்டார் - மணமூட்டிய நீண்ட
கூந்தலையுடைய உமையம்மையாரை ஒரு பாகத்தில் உடைய இறைவரது
இசைக்கீதங்களை யாழில் இட்டனர்.
 
    அமர்ந்தார் - விரும்பி வீற்றிருக்கின்ற சிவபெருமான்; வினையாலணையும் பெயர்.