பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்544

 
4226.    வரும்பான் மையினிற் பெரும்பாணர் மலர்த்தாள் வணங்கி வயற்சாலிக்
கரும்பார் கழனித் திருநாவ லூரிற் சைவக் கலைமறையோர்
அரும்பா நின்ற வணிநிலவும் பணியு மணிந்தா ரருள்பெற்ற
சுரும்பார் தொங்கற் சடையனார் பெருமை செப்ப லுறுகின்றோம். 12
 
     (இ-ள்) வரும்.......வணங்கி - பான்மைபற்றி வரும் திருநீலகண்டப்
பெரும்பாணனாருடைய மலர்போன்ற திருத்தாள்களை வணங்கி, (அத்துணை கொண்டு);
வயற்சாலி...மறையோர் - வயல் நெல்லும் கரும்பும் நிறைந்த கழனிகளையுடைய
திருநாவலூரில் வந்த சிவாகம நியதியினையுடைய சிவவேதியரும்; அரும்பா
நின்ற.....சடையனார் - முளைக்கின்ற அழகிய பிறையினையும் பாம்பினையும் சூடிய
சிவபெருமானுடைய திருவருளைப் பெற்றவரும் ஆகிய வண்டுகள் மொய்க்கும்
மாலையினை அணிந்த சடையனாரது; பெருமை செப்பலுறுகின்றாம் - பெருமையினைச்
சொல்லப் புகுகின்றோம்.
 
     (வி-ரை) ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை
முடித்துக்காட்டி இனி வரும் வரலாற்றுக்குத் தோற்றுவாய் செய்கின்றார்; இவ்வாறு வரும்
முடித்துக் காட்டுதலும் தொடங்கிக்காட்டுதலும் (உபசம்மாரம் உபக்கிரமம் என்பது
வடமொழி வழக்கு) இப்புராணத்துள் இதுவே கடைசியாகும்.
 
     மலர்த்தாள் - உவமைத் தொகை, சாலிக்கரும்பு - உம்மைத் தொகை; சாலியும்
கரும்பும்; “நிலத்திற் கணியென்ப நெல்லும் கரும்பும்” என்பது காண்க.
 
  வயற்சாலி - புன்செய் நிலத்தும் ஆறு ஏரிகளிலும் விளையும் நெல்வகைகளினின்றும்
பிரிக்க வயற்சாலி என்றார்.
 
     சடையனார் பெருமை - என்றதனுள் அவரது தேவியாராகிய இசைஞானியாரது
பெருமையும் இவர்களது திருமைந்தராய் “மூல மான திருத்தொண்டத் தொகைக்கு
முதல்வ ராய், இந்த, ஞால முய்ய எழுந்தருளும் நம்பி களது வரலாறும்
அமைந்துகொள்வதனால் திருத்தொண்டத்தொகையினுள்”
“என்னவனாம்...அன்பராவாரே” என்ற இரண்டடிகளின் பொருளும் விரிக்கப்பெற்று
இச்சருக்கம் நிறைவுறுதல் கண்டுகொள்க.
 
     பான்மையினில் வரும் - என்று மாற்றிக்கொள்க; பான்மை - ஊழ் - நியதி;
இங்குப் பான்மையில் வருதலாவது பாணர் மரபில்வரினும் மேம்பட்டு இறைவரருளும்
பிள்ளையாரருளும் பெற்று இப்பிறவியிலே சிவத்தை அணைந்த திறம். பால் - ஊழ்;
 
     திருநாவலூரில் - சடையனாரது பதி; சைவக்கலை - சிவாகமம். சைவக்கலை
மறையோர்
- சிவாகமங்களின் வழிவரும் ஒழுக்கமே யன்றி வேறு நெறி பயிலாத
நியமமுடைய சிவவேதியர். மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும், வேதியர்
குலத்திற் றோன்றி மேம்படு சடையனார்” (149); “எப்போது மினிய பிரா னின்னருளா
லதிகரித்து.....விதிமுறைமை வழுவாமே, முப்போது மருச்சிப் பார்” (4160)
 
     அரும்பாநின்ற....அருள்பெற்ற - “என்னவனா மரனடியே யடைந்திட்ட
சடையன்” என்பது முதனூல்; அரும்பா நின்று - அரும்புதல் - முளைத்தல்.
 
     கரும்பார் தொங்கல் - வேதியர் மரபுக்குரிய தாமரை மாலையினைக் குறித்தது.
 
     பெருமை - வரலாறின்றித் தன்மை குறித்தது.                         12