பக்கம் எண் :

1018திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


104. திருப்புகலி

பண்: வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 104

திருச்சிற்றம்பலம்

1122. ஆட லரவசைத்தா னருமாமறை தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகா டமர்ந்தபிரான்
ஏடவிழ் மாமலையா ளொருபாக மமர்ந்தடியா ரேத்த
ஆடிய வெம்மிறையூர் புகலிப் பதியாமே. 1

1123. ஏல மலிகுழலா ரிசைபாடி யெழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோ யண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே. 2

__________________________________________________

1. பொ-ரை: படம் எடுத்து ஆடும் பாம்பினை இடையில் கட்டியவனும், அரிய பெரிய வேதங்களை அருளிச் செய்தவனும், கொன்றை மலர் மாலையைச் சூடிய செஞ்சடை முடியை உடையவனும், சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு உறைபவனும், இதழ் அவிழும் மலர்கள் பூத்த பெரிய இமய மலை அரசனின் புதல்வியாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று அடியவர் போற்ற நடனம் ஆடியவனும் ஆகிய எம் இறைவனது ஊர் புகலிப் பதியாகும்.

கு-ரை: அரவணிந்து, வேதம் விரித்து, கொன்றை சூடி, சுடுகாட்டில் அமர்ந்த பிரான் உமையொரு பாகத்திருக்க ஆடிய இறைவன் ஊர் புகலிப்பதியாம் என்கின்றது. அசைத்தான் - கட்டியவன். ஏடு - இதழ். புகலி - சீகாழி.

2. பொ-ரை: மயிர்ச் சாந்தணிந்த கூந்தலினை உடைய மகளிர் காலையில் எழுந்து இசை பாடிக் கொண்டு இறையருள் பெறும் வேட்கையோடு சென்று சோலையின்கண் விளங்கும் சுனையில் துளைந்து நீராடித் துதி செய்ய, கரும்பு ஆலைகளில் நிறைந்தெழுந்த புகை சென்று தேவர்கள் உறையும் வானகத்தை மூடி நின்று காலையை நல்ல மாலைப் போதாகச் செய்வது புகலிப் பதியாம். மகளிர் நீராடித் துதி செய்ய விளங்குவது புகலிப் பதி என முடிவு காண்க.