பக்கம் எண் :

 108. திருப்பாதாளீச்சரம்1047


108. திருப்பாதாளீச்சரம்

பதிக வரலாறு:

பிள்ளையார் பொன்னி வளந்தரு நாடாகிய சோழ நாட்டில் திருக்களரை வழிபட்டு, பாதாளீச்சரத்தை அடைந்து, கண்டங் கறையணிந்தார் கழலைப் போற்றினார். "மின்னியல் செஞ்சடைமேல்" என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.

பண் : வியாழக்குறிச்சி

பதிக எண்: 108

திருச்சிற்றம்பலம்

1163. மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி

மத்தமொடு நல்ல

பொன்னியல் கொன்றையினான்

புனல்சூடிப் பொற்பமரும்

அன்ன மனநடையா ளொருபாகத்

தமர்ந்தருளி நாளும்

பன்னிய பாடலினா

னுறைகோயில் பாதாளே. 1

_________________________________________________

1. பொ-ரை: மின்னல் போன்ற செஞ்சடைமேல் விளங்கும் மதி, ஊமத்தமலர் பொன் போன்ற நல்ல கொன்றை ஆகியவற்றோடு கங்கையையும் சூடி, அழகு விளங்கும் அன்னம் போன்ற நடையினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, நாள்தோறும் வேத கீதங்களைப் பாடியவனாய்ச் சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

கு-ரை: இப்பதிகம் முழுதும் செஞ்சடைமேல், பிறை, ஊமத்தம், கொன்றை இவற்றையணிந்தவனும், கங்கையணிந்து உமையையொருபாகத் திருந்தருளச் செய்தவனும் ஆகிய இறைவன் உறைகோயில் திருப்பாதாளீச்சரம் என்கின்றது. ஒவ்வொரு பாடலிலும் தலத்தின் திருப்பெயருக்கேற்பப் பாம்பணிந்தமை பேசப்படுதல் காண்க. விளங்கும்மதி - இறைவன் திருமுடிமேல் இருத்தலின் விளக்கம் பெற்ற பிறை. ‘அன்னம் அனநடையாள்‘ அன்ன என்பது அன எனல் தொகுத்தல் விகாரம்.