பக்கம் எண் :

1252திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


கு-ரை: ஞானசம்பந்தப் பெருமான் செந்தமிழால் திருத் தருமபுரப் பதியில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன் கழல்களைப் பேணுதல் உரியார் நல்லுலகம் எய்துவர்; போகம் பெறுவர்; இடரும் பிணியும் எய்தப்பெறார் என்கின்றது. விழவம் மலீ - விழாக்கள் நிறைந்த, பொரூஉ புனல் - கரையை மோதுகின்ற நீர். திரு திரூஉ ஆயிற்றுச் சந்தம் நோக்கி, புகல்லி - புகலி; விரித்தல் விகாரம். தன்னொடு நேர்பிற இல் பதி - தனக்குச் சமம் வேறில்லாத நகரம்; என்றது சீகாழியை, பேணுதல் - தியானித்தல். இப்பதிகத்தைச் சொல்லி இறைவனைத் தியானிப்பவர்கள் நல்லுலகம் எய்துவர்; போகம் பெறுவர்; அவர்களைப் பிணியும் துயரும் பொருந்தா; என்றும் இன்பம் பெறுவர்.

திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்

முதல் திருமுறை

மூலமும் - உரையும் நிறைவுற்றது.

திருஞானசம்பந்தர் புராணம்

வண்புகலி வேதியனார் மாதர்மடப் பிடிஎடுத்து

வனப்பிற் பாடிப்

பண்பயிலுந் திருக்கடைக்காப் புச்சாத்த அணைந்துபெரும்

பாண னார்தாம்

நண்புடையாழ்க் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு

நடத்தப் புக்கார்க்(கு)

எண்பெருகும் அப்பதிகத் திசைநரம்பில் இடஅடங்கிற்

றில்லை அன்றே.

சிந்தையால் அளவுபடா இசைப்பெருமை செயலளவில்

எய்து மோ? நீர்

இந்தயா ழினைக்கொண்டே இறைவர்திருப் பதிகஇசை

இதனில் எய்த,

வந்தவா றேபாடி வாசிப்பீர் எனக்கொடுப்பப்

புகலிமன்னர்

தந்தயா ழினைத்தொழுது கைக்கொண்டு பெரும்பாணார்

தலைமேற் கொண்டார்.

- சேக்கிழார்.