பக்கம் எண் :

 14. திருக்கொடுங்குன்றம்377


14. திருக்கொடுங்குன்றம்

பதிக வரலாறு :

பாண்டிய நாடு செல்லத்திருவுளம் பற்றிய ஆளுடைய பிள்ளையார், நதிகள் பலவற்றையுந் தாண்டி, காட்டு வழிகளையுங்கடந்து, திருக்கொடுங் குன்றத்தை அடைந்தார்கள். அங்கு எழுந்தருளியுள்ள கொழும்பவளச் செழுங்குன்றை வணங்கி ‘வானிற் பொலி‘ என்னும் இப்பதிகத்தையருளிச் செய்தார்கள்.

பண் : நட்டபாடை

பதிக எண் : 14

திருச்சிற்றம்பலம்

141. வானிற்பொலி வெய்தும்மழை

மேகங்கிழித் தோடிக்

கூனற்பிறை சேருங்குளிர்

சாரற்கொடுங் குன்றம்

ஆனிற்பொலி யைந்தும்அமர்ந்

தாடியுல கேத்தத்

தேனிற்பொலி மொழியாளொடு

மேயான்திரு நகரே. 1

_________________________________________________

1. பொ-ரை: வளைந்த பிறைமதி வானின்கண் விளங்கும் மழை மேகங்களைக் கிழித்து ஓடிச் சென்று சேரும் குளிர்ந்த சாரலை உடைய கொடுங்குன்றம், பசுவிடம் விளங்கும் பால் நெய் தயிர் கோமயம் கோசலம் ஆகிய ஐந்து பொருள்களையும் மகிழ்ந்தாடி உலகம் போற்றத் தேன்போலும் மொழியினைப் பேசும் உமையம்மையோடு சிவபிரான் மேவிய திருத்தலமாகும்.

கு-ரை: கூனல்பிறை மேகங்கிழித்து ஓடிச்சேருங் கொடுங்குன்றம் எனக்கூட்டுக. மழைமேகம் - சூல்முற்றி மழை பொழியும் மேகம். தேனில் பொலி மொழியாள் - குயில் அமுதநாயகி. இளம்பிறை கனத்த மேகப் படலத்தைக் கிழித்துச் சென்று சேர்தற்கிடமாகிய குளிர்சாரல் குன்று என்றமையால், ஆன்மாக்கள் அநாதியான ஆணவமலப் படலத்தைக் கிழித்துச் சென்று எய்தி, திருவடி நிழலாகிய தண்ணிய இடத்தைச் சாரலாம் என்பது குறித்தவாறு.