பக்கம் எண் :

42பதிப்புரை(முதல் திருமுறை)



குருபாதம்
பதிப்புரை

திருப்பனந்தாள்
ஸ்ரீகாசிமடத்து அதிபர், கயிலை மாமுனிவர்
ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள்.

திருச்சிற்றம்பலம்

"அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே."

- ஞானசம்பந்தர்.

தமிழ் மக்களின் தவப்பயனாகத் தோன்றிய அருளாளர்கள் இருபத்தெழுவர் நமக்கு அளித்துள்ள ஞானக்கருவூலங்கள் பன்னிரு திருமுறைகள். இவை உலக வாழ்க்கையில் மக்கட்கு வேண்டும் நலங்களை அருளுவதோடு முடிவில் இறைவன் திருவடிப் பேற்றையும் நல்குவனவாகும். பன்னிரு திருமுறைகளைப் பக்தியோடு பாராயணம் செய்து நலம் பெறுமாறு நமது தருமை ஆதீன ஆதிபரமாசாரியர் ஸ்ரீகுருஞானசம்பந்தர் நமக்கு அறிவுறுத்துகின்றார். அப்பாடல்,

"ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீசீ
சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கென்ன வாய்."

என்பதாகும். பன்னிரு திருமுறைகளில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிய முதல் 7 திருமுறைகள் தேவாரம் எனப்படும். தேவாரம் என்பதற்குத் தெய்வத்தைப் போற்றும் இசைப்பாடல்கள் என்பது பொருள் ஆகும்.

ஞானசம்பந்தரும் அப்பரும்:

ஞானசம்பந்தரும் அப்பரும் சமகாலத்தவர்கள். இவ்விருவர் காலமும் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். அந்நாளில் தமிழகத்தில் சமண, புத்த சமயங்கள் மேலோங்கிச் சைவம் நிலை