பக்கம் எண் :

 27. திருப்புன்கூர்481


27. திருப்புன்கூர்

பதிக வரலாறு :

திருநின்றியூர், திருநீடுர் இவைகளை வணங்கிக்கொண்டு திருப்புன்கூரையடைந்த பிள்ளையார் ‘முந்தி நின்ற’ என்னும் பதிகத்தைப் பாடியருளினார். இத்தலத்திற்குச் சென்றதும், ஞானசம்பந்தப்பெருமான் நடராஜப்பெருமானை முதற்கண் தரிசித்திருப்பார் போலும். அதனை ஒன்பதாம் திருப்பாட்டில் ‘ஆடவல்ல அடிகள் அவர்போலும்’ என்று குறிப்பிடுகிறார். இதனைச் சேக்கிழார்பெருமான் ‘திருப்புன்கூர் நண்ணி ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடியமர்ந்தார்’ என விளக்கிக் காட்டுகிறார்.

பண் : தக்கராகம்

பதிக எண்: 27

திருச்சிற்றம்பலம்

283. முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்த மில்லா வடிக ளவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே. 1

__________________________________________________

1. பொ-ரை: நெஞ்சே! பல பிறவிகளிலும் செய்தனவாய சஞ்சித, ஆகாமிய வினைகளுள் பக்குவப்பட்டுப் பிராரத்த வினையாய்ப் புசிப்பிற்கு முற்பட்டு நின்ற வினைகள் பலவும் நீங்க, திருப்புன்கூரில் ஆதி அந்தம் இல்லாத தலைவராய், மணம் நிறைந்து கமழும் செந்நிறச் சடைமுடி உடையவராய் எழுந்தருளிய சிவபிரானாரைச் சிந்தனை செய்வாயாக.

கு-ரை: இது பழவினையற, நெஞ்சே! திருப்புன்கூர்ச் சிவனாரைச் சிந்தி, என்கிறது.

முந்திநின்ற வினைகள் - நுகர்ச்சிக்குரியனவாகப் பரிபக்குவப்பட்டு நிற்கும் ஆகாமிய சஞ்சித வினைகள். அந்தம் - முடிவு. கந்தம் - மணம்.