பக்கம் எண் :

 30. திருப்புகலி499


30. திருப்புகலி

பண் : தக்கராகம்

பதிக எண் : 30

திருச்சிற்றம்பலம்

316. விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே. 1

317. ஒன்னார் புரமூன்று மெரித் தவொருவன்
மின்னா ரிடையா ளொடுங்கூ டியவேடந்
தன்னா லுறைவா வதுதண் கடல்சூழ்ந்த
பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே. 2

__________________________________________________

1. பொ-ரை: மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என விதித்த விதியாகவும், அதன்காரணமாக வந்த மரணமாய், அவர் இறை வழிபாடு செய்ததன் காரணமாகத்தானே விதியின் பயனாய் வெளிப்பட்டுச் சினந்துவந்த கூற்றுவனை உதைத்தருளிய சிவபிரான் எழுந்தருளிய தலம். தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த பொழில்களும் சூழ்ந்த புகலிநகராகும்.

கு-ரை: இது கூற்றுதைத்தார் பதியாவது புகலிநகர் என்கின்றது. விதியாய் - மார்க்கண்டற்கு வயது பதினாறு என்ற விதியாய். விளைவாய் - அவ்விதியின் விளைவாகிய மரணமாய். விளைவின் பயன் ஆகி - மரணத்தின் பயனாகித் தான் வெளிப்பட்டு. கொதியா - சினந்து. கொதியா வருகூற்றை உதைத்தவர் என்றது, இங்ஙனம் விதியென்னும் நியதியைத் துணைபற்றி வந்த கூற்றுவன் அந்நியதிக்கும் காரணம் இறைவன் என்பதை உணர்ந்துகொள்ள வைத்த பெருங்கருணை.

2. பொ-ரை: பகைவராய் மாறிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த சிவபிரான் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு கூடிய திருவுருவத்தோடு எழுந்தருளிய இடம், குளிர்ந்த கடல் ஒருபுறம் சூழ, பொன் போன்ற நெல்மணிகள் நிறைந்த வயல்களை உடைய புகலிநகராகும்.