பக்கம் எண் :

 31. திருக்குரங்கணின்முட்டம்505


31. திருக்குரங்கணின்முட்டம்

பதிக வரலாறு:

பிள்ளையார், திருவோத்தூரில் ஆண்பனையைப் பெண் பனையாக்கி, அமணர்களைச் சைவர்களாக்கித் திருமாகறல் என்னும் தலத்தை வணங்கியபின், குரங்கணின் முட்டத்தைச் சேர்ந்தார். அங்கு, ஆதிமுதல்வர் தாளைவணங்கிக் ‘குரங்கணில் முட்டம் தொழுநீர்மையர் துன்பமிலரே’ எனச் சிறப்பித்து ‘விழுநீர் மழுவாள்’ என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.

பண் : தக்கராகம்

பதிக எண்: 31

திருச்சிற்றம்பலம்

327. விழுநீர் மழுவாட் படையண் ணல்விளங்கும்
கழுநீர் குவளைம் மலரக் கயல்பாயும்
கொழுநீர் வயல்சூழ்ந் தகுரங் கணின்முட்டம்
தொழுநீர் மையர்தீ துறுதுன் பமிலரே. 1

__________________________________________________

1. பொ-ரை: பெருமைக்குரிய கங்கையை முடிமிசை அணிந்த வரும், மழுவாட்படையைக் கையில் ஏந்தியவரும் ஆகிய சிவபிரான் உறைவது கழுநீர், குவளை ஆகியன மலர்ந்து, கயல்மீன்கள் துள்ளுமாறு விளங்கும் நீர் நிலைகளை உடையதும், செழுமையான வயல்களால் சூழப்பட்டதுமாகிய திருக்குரங்கணில்முட்டம் ஆகும். இத்தலத்தைத் தொழுபவர் தீமையால் வரும் துன்பம் இலராவர்.

கு-ரை: கங்கையையணிந்தவரும், மழுவேந்தியவருமாகிய இறைவன் விளங்கும் இத்தலத்தைத் தொழுபவர் துன்பமிலர் என்கின்றது.

விழுநீர் - பெருமையையுடையநீர், கங்கை. கொழு நீர் - வளமான நீர். தீதுறு துன்பம் - தீமையான்வரும் துன்பம்; பாவ கன்மத்தான்வரும் துன்பம் என்பதாம். தீதுகழுவி ஆட்கொள்ளக் கங்கையையும், துன்பந்துடைக்க மழுப்படையையும் உடைய பெருமாளாதலின் துன்பம் இலர் என்றார்.