பக்கம் எண் :

528திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


35. திருவீழிமிழலை

பதிக வரலாறு :

பிள்ளையார் எழுந்தருளுவதைத் திருநாவுக்கரசு சுவாமிகளாலும், அடியார்களாலும் அறிந்துகொண்ட திருவீழிமிழலையந்தணர்கள், நிறைகுடம் முதலிய அட்டமங்கலங்களுடன் வரவேற்க, பிள்ளையார் முத்துச் சிவிகையினின்றும் கீழிறங்கி அந்தணரும், அடியாரும் புடைசூழ எழுந்தருள்கின்றார்கள். அப்போது ‘அரையார் விரிகோவண ஆடை‘ என்னும் ஒப்புரைக்க இயலாத இப்பதிகத்தை இசையுடன் ஓதிக்கொண்டே சிவஞானச் செந்தாமரையில் வீற்றிருக்கும் விடையேறும்பிரான் திருக்கோயிலை அடைந்து உச்சிமேற் கரங்குவித்து வணங்கினார்கள்.

பண்: தக்கராகம்

பதிக எண்: 35

திருச்சிற்றம்பலம்

371. அரையார்விரிகோ வணவாடை
நரையார் விடையூர் திநயந்தான்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
உரையா லுணர்வா ருயர்வாரே. 1

__________________________________________________

1. பொ-ரை: இடையிற் கட்டிய விரிந்த கோவண ஆடையையும், வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியையும் விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபிரான் உறைவதும், மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருவீழிமிழலையின் புகழை நூல்களால் உணர்வார் உயர்வடைவர்.

கு-ரை: வீழிமிழலையைத் தியானிப்பவர்கள் உயர்வர் என்கின்றது. கோவண ஆடையையும் ஊர்தியையும் நயந்தான் என முடிக்க. நரை - வெண்மை. உரையால் - வேதாகமங்களில் சொல்லப்பட்ட சொற்களால். விரிகோவணம் - படம் விரியும் பாம்பாகிய கோவணம். "அற்றம் மறைப்பது முன்பணியே" "ஐந்தலைய மாசுணங்கொண்டு அரையார்க்குமே" என்ற பகுதிகள் இதற்கு ஒப்பு.