பக்கம் எண் :

 38. திருமயிலாடுதுறை545


38. திருமயிலாடுதுறை

பதிக வரலாறு:

மூவலூரைக் காதலோடு வணங்கி ஏத்தப் போதருகின்ற பிள்ளையார் திருமயிலாடுதுறை என்னும் மாயூரதலத்தை அடைந்தார்கள். அப்போது அவ்வூர் அந்தணர்கள் அடியார்களோடு எதிர்கொள்ள எழுந்தருளி, மானேந்திய பெருமானைத் திருக்கோயிலிற் சென்று வணங்கினார்கள். எல்லையில்லதோர் ஆனந்தம் அடைந்தார்கள். ‘கரவின்றி நன்மாமலர்‘ என்னும் இப்பதிகத்தைத் தெளிந்த இசையோடும் ஓதியருளினார்கள்.

பண்: தக்கராகம்

பதிக எண்:38

திருச்சிற்றம்பலம்

404. கரவின் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே. 1

__________________________________________________

1. பொ-ரை: நெஞ்சிற் கரவின்றி மணம் மிக்க சிறந்த மலர்கள் பலவற்றையும் பறித்துக் கொண்டு வந்து இரவும் பகலும் தொழும் அடியார்களுக்கு, தலைமாலை பொருந்தும் செஞ்சடை உடைய சிவ பெருமான் வாழும் பதியாகிய மயிலாடுதுறை மேம்பட்ட தலமாகும். வள்ளன்மை யுடையான் உகந்தருளும் இடமுமாம்.

கு-ரை: இது மயிலாடுதுறை, இரவும் பகலுந்தொழும் அடியார்கட்குச் சிரம் ஒன்றும் சிவன்வாழும் இடம் என்று அறிவிக்கிறது. கரவு - வஞ்சனை. சிரம் - தலைமாலை.

குருவருள்: வரம் என்ற சொல் வழங்குதலைக் குறிக்கும் இங்குள்ள பெருமான் வள்ளற் பெருமானாகலின் வரம் என்ற சொல்லால் அவ்வள்ளலைக் குறித்துள்ளார். அப்பர், வள்ளல் என்று குறிப்பிட்டுள்ளதும் காண்க. மயிலாடுதுறையரன் அடியார்களுக்கு வள்ளலாக அருள் வழங்குகிறான் என்பது குறிப்பு.