| 
 
      525. சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித் தோயடைந்த வண்வயல்சூழ் தோணிபு ரத்தலைவன் சாயடைந்த ஞானமல்கு சம்பந்தனின்னுரைகள் வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே. 11 திருச்சிற்றம்பலம். ---------------------------------------------------------------- 11. பொ-ரை: முருகப் பெருமான் வழிபட்ட
சிறப்பினதாகிய திருச்சேய்ஞலூரில் விளங்கும் செய்வனாகிய
சிவபிரானது புகழைப் போற்றி நீர்வளம் சான்ற,
வளமையான வயல்களால் சூழப்பட்ட தோணிபுரத்தின்
தலைவனும், நுட்பமான ஞானம் மிக்கவனுமாகிய சம்பந்தனுடைய
இன்னுரைகளை வாயினால் பாடி வழிபட வல்லவர் வானுலகு
ஆள்வர். கு-ரை: நுணுகிய ஞானத்தோடு கூடிய இப்பதிகம்
வல்லவர்கள் வானுலகு ஆள்வர் என்கின்றது. சேய் -
முருகன். முருகன் சூரபன்மாவைக் கொல்லப் படை எடுத்த
காலத்து இத்தலத்தில் தங்கி இறைவனை வழிபட்டார்
என்பது கந்த புராண வரலாறு ஆதலின் ‘சேயடைந்த சேய்ஞலூர்’
என்றார். தோயடைந்த - நீர் நிறைந்த. தோயம் என்பது
தோய் என ஈறு குறைந்தது. சாய் - நுணுக்கம். 
  
  
    
      | 
      திருத்தொண்டர் புராணம் 
      திருஞானசம்பந்தர் புராணம் 
      வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்காதலிற் பணிந்தவர் கருணைபோற்றுவார்
 தாதைதாள் தடிந்தசண் டீசப்
      பிள்ளையார்
 பாதகப் பயன்பெறும் பரிசு
      பாடினார்.
 
 - சேக்கிழார். |  |