பக்கம் எண் :

 9. திருத்தூங்கானைமாடம்703


59. திருத்தூங்கானைமாடம்

பதிக வரலாறு:

திருமுதுகுன்றத்தை வணங்கி எழுந்தருளிய பிள்ளையார் பெண்ணாகடத்தை யடைந்தார்கள். அங்கு, வேதவோசை நீங்காத தூங்கானைமாடச் சுடர்க்கொழுந்தை வணங்கி வலங்கொண்டு ‘ஒடுங்கும் பினி பிறவி‘ என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார்கள்.

இப்பதிகத்தின் சுருக்கமான குறிக்கோள் ‘தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் தூங்கானைமாடம்‘ என்பது எனச் சேக்கிழார் பெருமான் அருளியுள்ளார்கள்.

பண் : பழந்தக்கராகம்

பதிக எண் : 59

திருச்சிற்றம்பலம்

634. ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை

யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்

அடங்கும் மிடங்கருதி நின்றீரெல்லாம்

அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணம்

கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங்

கெழுமனைக டோறு மறையின்னொலி

தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர்

தூங்கானை மாடந் தொழுமின்களே. 1

__________________________________________________

1. பொ-ரை: வெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள் தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக.